பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களை பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்படும் என சிபிஐ அறிவித்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர், வழக்கு நடந்து வரும் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்கு இந்த கும்பல் செய்த கொடுமைகளை வாக்குமூலமாக கொடுத்துள்ளார். மேலும், தன்னை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்துவைத்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், மேலும் 2 பெண்களும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை வாக்குமூலமாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், பொள்ளாச்சி ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு, மற்றும் அருளானந்தம் ஆகியோரை கைது செய்தனர். இவர்களும், இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, ரிஸ்வான், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோரும் நண்பர்கள் . இவர்கள் அனைவரும் சேர்ந்தே பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம், அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்தவர். ( கைது செய்யப்பட்ட பின்னர், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.)
கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிமன்றம் எதிரே ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றினர். இதனிடையே, சிபிஐ சரியான கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதையே தற்போதைய கைது காட்டுவதாக வழக்கறிஞர் சாந்தகுமாரி கூறியுள்ளார்.
இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அரசியல்வாதிகளின் தொடர்பை அம்பலப்படுத்தினாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார். இவ்வழக்கில் நிறைய வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அதில் உள்ள நபர்களை கைது செய்து தாமதிக்காமல் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐ விசாரணையின் அடிப்படையில் மேலும் சில கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
மேலும் படிக்க...அரசு மருத்துவமனைகள் சாக்கடை போல் உள்ளன: கமல் விமர்சனம்
.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.