திமுக பிரச்சாரத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்: பொள்ளாச்சி ஜெயராமன், மகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

திமுக பிரச்சாரத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்: பொள்ளாச்சி ஜெயராமன், மகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி அருகே திமுக பிரச்சாரத்தில் புகுந்து ரகளை செய்து கொலை  மிரட்டல் விடுத்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,  அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஒக்கிலிபாளையம் ஊராட்சியில் நேற்று இரவு பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து பெண்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சபரிமாலா  பிரச்சாரம் மேற்கொண்டார். பொள்ளாச்சியில் இளம்பெண்கள்  பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, ஆசிரியை சபரிமாலா பேசிக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனையடுத்து திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பும் பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திமுக சார்பில் பார்த்தசாரதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது புகார் அளித்தனர். புகார் மனுவில் பிரவீன் வாகனத்தை ஏற்றி கொலை செய்துவிடுவதாக மி்ரட்டல் விடுத்து இருப்பதாகவும், இதன் பின்னணியில் பொள்ளாச்சி ஜெயராமன் இருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு  இருந்தது.

இதனையடுத்து சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன், நாமகிரிராஜ், சதீஷ் குமார், வீராச்சாமி, நாகமாணிக்கம், உதயகுமார், ஜெகதீஸ்வரன் ஆகிய அதிமுகவினர் 8 பேர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையில் பேசுதல், சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்தல், காயம் ஏற்படுத்துதல், முறையற்று தடுத்து நிறுத்துதல் ஆகிய 6  பிரிவுகளில் பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரில் திமுகவைச் சார்ந்த சின்னான் , சுரேஷ் குமார், சாமிநாதன் மற்றும் பெண்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்த சபரிமாலா உள்ளிட்டோர் மீதும் வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தகராறின் போது  மணிகண்டன் என்பவர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன்  , தன்னை சாதியைச் சொல்லித் திட்டியதாக புகார் ஒன்றை வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அந்த புகார் மீதும் வடக்கி பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பேசியதற்காக அதிமுகவினர் தகாத வார்த்தையில் பேசி தன்னை தாக்க முயன்றதாக ஆசிரியை சபரிமாலா தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகார்கள் குறித்து வடக்கிபாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Karthick S
First published: