ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை - கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம்

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை - கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம்

எ.வ.வேலு

எ.வ.வேலு

தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதற்கு வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான 15 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நடைபெறப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டப் போவதற்குக் கட்டியம் கூறும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சோப இலட்சம் பேர் அணி திரண்டு வருகிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை அரசியல் வல்லுநர்களின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

  மத்திய பா.ஜ.க அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செய்து வரும் அதே மிரட்டல், அதிகார அத்துமீறலைத் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது.

  இந்நிலையில் அரசியல் களத்தில் அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜ.க அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டிப் பார்க்கிறது.

  திருவண்ணாமலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர் தங்கி இருந்த அறை உள்ளிட்ட தி.மு.கவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திருவண்ணாமலை எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்துக்குரியது.

  மத்திய பா.ஜ.க அரசின் இத்தகைய மிரட்டல்களால் ஒருபோதும் தி.மு.க கூட்டணியின் வெற்றியைத் தடுத்து விட முடியாது; எடப்பாடி அரசு மற்றும் பா.ஜ.க ஆட்சியாளர்களின் கூட்டுச்சதி தூள் தூளாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  வருமான வரித்துறை சோதனை தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், ‘எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டதன் மூலம் அவருடைய தேர்தல் பணிகளை முடக்கிவிடலாம் என்று பா.ஜ.க திட்டம் தீட்டுகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவை பா.ஜ.க அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவைகளைத் தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை முடக்குவதற்கு பயன்படுத்துவதன் மூலம் தேர்தலில் ஆதாயம் தேடலாம் என்பது பகல் கனவாகத்தான் முடியும். இந்த முயற்சிகளுக்கு பின்னால் இருக்கிற ஜனநாயக விரோதச் செயல்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இத்தகைய செயல்கள் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்கிற மத்திய பா.ஜ.க அரசையும், துணை போகிற அ.தி.மு.கவிற்கு தமிழக வாக்காளர்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  வருமான வரித்துறை சோதனை குறித்து பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை செய்யப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை முடக்கும் செயல்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: DMK, Income Tax raid, KS Alagiri, TN Assembly Election 2021, Vaiko