பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இடம்பெற்றிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் யாரும் வெளியிட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. தெரியாமல் பதிவிட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை, பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
இது அப்பட்டமான விதிமீறல் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி யாரும் புகார் தராமல் இருப்பதற்கான மறைமுகமான அச்சுறுத்தல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி தொடர்ந்து கபட நாடகம் ஆடுவதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,
அரசின் இந்த மெத்தனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு தொடர்பில்லை என்பதில் காட்டும் தீவிரத்தை, குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்வதில் காட்டாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளியானது தொடர்பாக, காவல்துறையிடம் மாநில மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கும் சூழ்நிலையை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இந்த வழக்கில் முதலில் புகார் அளித்து, விவகாரத்தை வெளியே கொண்டுவந்த பெண்ணின் வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின்பேரில், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசின் தரம்தாழ்ந்த செயலை காட்டுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

சபரீசன்
பார் நாகராஜ்
இதனிடையே, புதிதாக வெளியான ஆபாச வீடியோவில் இருப்பது தாம் இல்லை என பார் நாகராஜ் மறுத்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ்தான் அந்த வீடியோவில் இருப்பதாக கூறும் நாகராஜ், அடிதடி வழக்கில் மட்டுமே தாம் கைது செய்யப்பட்டதாகவும், பாலியல் விவகாரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

பார் நாகராஜ்
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களும் வலுத்து வருகின்றன. சட்டக்கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை
பொள்ளாச்சியில் பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக 2-வது நாளாக விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியிலுள்ள திருநாவுக்கரசு வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.
மாலை 3:30 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7:30 மணி வரை நடைபெற்றது. சோதனையின் போது வீட்டில் இருந்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சோதனையின் முடிவில் வீட்டில் இருந்து பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also see... தேர்தல் 40-40... வடசென்னை தொகுதி ஒரு சிறப்பு பார்வை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.