உணவகத்தில் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரத்தில் எஸ்.ஐ முத்து பணியிடை நீக்கம் ..

Youtube Video

கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என கூறி கோயம்புத்தூரில் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. ஒருவர் ஓட்டலுக்குள் புகுந்து தாக்கியுள்ளார். 

 • Share this:


  தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. திரையரங்குகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படவும், உணவகங்கள் இரவு 11 மணிவரை செயல்படவும் அனுமதி உள்ளது. இந்நிலையில் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வெளியூர் பேருந்துகள் செல்லும் இடத்தில் ஸ்ரீ ராஜா என்ற உணவகம் செயல்பட்டு வருகின்றது.

  ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் உணவகத்தில் பொதுமக்கள் உணவு அருந்துவந்துள்ளனர். அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் முத்து உணவகத்தை மூடசொல்லி நிர்பந்தம் செய்ததாக தெரிகின்றது. அதற்கு எதிரிப்பு தெரிவித்த உணவக உரிமையாளர் இரவு 11 மணிவரை உணவகம் செயல்படலாம் என்று உள்ளநிலையில் ஏன் நிர்பந்தம் செய்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார்.

  ஆனால் அதை பொருட்படுத்தாத உதவி ஆய்வாளர் மோகன் உணவகத்தின் கதவை மூடிவிட்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு உணவருந்திக்கொண்டிருந்த பொதுமக்களை எழுந்து செல்லுமாரு சொல்லியவர் அவர்கள் மீது திடீரென சரமாரியாக லத்தியால் தாக்க தொடங்கியுள்ளார். அத்துடன் உணவக ஊழியர்கள் மீதும் தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் உணவக ஊழியர் ஒருவருக்கு ரத்த காயமும் எற்பட்டுள்ளது.

  மேலும் உணவருந்திய பெண் ஒருவருக்கும் தலையில் காயம் எற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.  உணவகம் முறையாக கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தான் செயல்படுவதாக தெரிவிக்கும் உணவகத்தின் உரிமையாளர் மோகன் மாமூல் பிரச்னையில் தான் காவலர் இது போன்று செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றார். இதேபோல இரவு நேரத்தில் பேக்கரியை மூடக்கோரி காசாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கும் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது

  குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் ஒரு பேக்கரி கடை இயங்கி வருகிறது. கடந்த மார்ச் 29ம் தேதி இரவு 10.25 மணியளவில் கடையை மூடச் சொல்லி எச்சரித்துள்ளார் குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ். அதோடு நிற்காமல், பேக்கரி காசாளரை அடித்து காவல்நிலையத்திற்கும் இழுத்துச் சென்றுள்ளார். அவரது நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்ட வியாபாரிகளிடம் உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  இந்நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம், பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் மோகன் ராஜ் புகார் அளித்துள்ளார். காட்டூர் காவல்நிலைய ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் கடைகளில் மாமூல் வசூல் செய்வதாகவும் அதற்கு உடன்படாவிட்டால் இதுபோன்று நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். காவல் உதவி ஆய்வாளர் முத்து மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகன்ராஜ் தனது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

  மேலும் படிக்க... திருப்புவனம் அருகே தேர்தல் முன்விரோதத்தால் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை.... திமுக நிர்வாகி கைது

   

  மேலும் இந்த விவகாரத்தில் கோவை மாநகர காவல்ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்திற்குள் அஞ்சல் வழியே பதில் அளிக்க வேண்டும் என்று, கோவை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியது.


  இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் உணவகத்தில் ஊழியர்களையும், உணவருந்திக் கொண்டிருந்தவர்களையும் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: