• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கல்லூரி மாணவி கொடூரக் கொலை! தடயம் கிடைக்காமல் காவல்துறை திணறல்

கல்லூரி மாணவி கொடூரக் கொலை! தடயம் கிடைக்காமல் காவல்துறை திணறல்

கிணறு அருகில் மாணவியின் சடலம்

கிணறு அருகில் மாணவியின் சடலம்

கொலை நடந்த இடத்தில் ஆர்த்தியின் தலைமுடி அறுக்கப்பட்டு போடப்பட்டதுதான், வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் அம்சமாக பார்க்கப்படுகிறது. 

 • News18
 • Last Updated :
 • Share this:
  புதுக்கோட்டையில் கல்லூரிக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

  புதுக்கோட்டை மங்களாகோவில் பகுதியில், இளம்பெண்ணின் உடல் கிணற்றில் மிதப்பதாக கிடைத்தத் தகவலை அடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. கிணற்றுக்கு அருகே புத்தகங்கள் சிதறி கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், புத்தகத்தை எடுத்து பார்த்தபோது அதில் ஆர்த்தி என்று எழுதி இருந்தது. அதேபோல், புத்தகங்களுக்கு அருகே தலைமுடி வெட்டப்பட்டு கொத்துக்கொத்தாக கிடந்ததைப் பார்த்த உள்ளூர் மக்கள் பதறினர். 19 வயது ஆர்த்தி, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை, தமிழரசி தம்பதியின் மகள் என்பதை கண்டுபிடித்த மக்கள், உடனடியாக குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆர்த்தி, பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் தினம்தோறும் மங்களாகோவிலிலிருந்து கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் சென்று வருவது வழக்கம். கடந்த 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம்போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு கிளம்பியுள்ளார். ஆனால், யாரும் எதிர்பார்த்திராதவகையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  சம்பவ இடத்துக்கு வந்த கந்தர்வகோட்டை போலீசாரும், மீட்புக்குழுவினரும், கிணற்றிலிருந்த சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பிரேதப் பரிசோதனையில், மாணவி ஆர்த்தி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கந்தர்வகோட்டை போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி, கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

  மங்களாகோயில் கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆர்த்தி படித்து வந்த ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியிலும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளிகள் குறித்த எந்தத் தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, மாணவி சடலமாக கிடந்த கிணற்றில் தண்ணீரை முழுமையாக அகற்றி விட்டு பார்த்துள்ளனர். அப்போதும் கொலை குறித்த தடயம் எதுவும் சிக்கவில்லை

  ஆனால், கிணறு அருகே உள்ள வயலில் கிடந்த 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மோப்பநாயைக் கொண்டு ஆய்வு செய்தபோது, அங்குள்ள தண்ணீர் தொட்டி வரை மோப்ப நாய் சென்று நின்றுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  ஆர்த்தி உயிரிழந்த பிறகு, அவரது உடலை கொலையாளி கிணற்றில் போட்டுவிட்டு தப்பியதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.  ஆர்த்தி அணிந்திருந்த நகைகள், அவரது உடலில் அப்படியே இருப்பதால், ஆதாயக் கொலை இல்லை என்று காவல்துறை கருதுகிறது.

  இருப்பினும், காலை 5.30 மணிக்கு மாணவி வீட்டை விட்டு கிளம்பிய நிலையில், 5.40 மணிக்கு கிணற்று நீர் பட்டு கை கடிகாரம் நின்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து கிளம்பிய 10 நிமிடங்களில் ஆர்த்திக்கு என்ன நடந்திருக்கும்? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

  கொலை நடந்த இடத்தில் ஆர்த்தியின் தலைமுடி அறுக்கப்பட்டு போடப்பட்டதுதான், வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் அம்சமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு கோணங்களில் போலீசாரின் புலன் விசாரணை விரிவடைந்துள்ள நிலையில், தடயங்கள் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதனிடையே, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்படுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

  Also see:

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: