லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ வீட்டில் சோதனை: அலிபாபா புதையல் போல நகை, பணம்!

news18
Updated: September 12, 2018, 6:47 PM IST
லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ வீட்டில் சோதனை: அலிபாபா புதையல் போல நகை, பணம்!
பணம் மற்றும் நகை
news18
Updated: September 12, 2018, 6:47 PM IST
கடலூரில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில், 35 லட்சம் ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருபவர் பாபு. 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பாபுவும், அவரது உதவியாளருமான செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தனது வேனுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக, கூத்தக்குடியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்திவரும் முத்துக்குமார் என்பவரை அணுகியுள்ளார். தகுதிச் சான்றிதழ் பெற 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் என முத்துக்குமார் கூறியதாகத் தெரிகிறது.

முத்துக்குமார், ரமேஷ் வாகனத்துக்கான தகுதிச் சான்றிதழ் தொடர்பாக கள்ளக் குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை சந்தித்துள்ளார். 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் தகுதிச் சான்றிதழ் கிடைக்கும் என பாபு கூறியதாக முத்துக்குமார் ரமேஷிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரமேஷ், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி செயல்பட்ட ரமேஷ், ரசாயனம் கலந்த 25 ஆயிரம் ரூபாயை ஆய்வாளர் பாபுவிடம் கொடுத்துள்ளார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக உதவியாளர் செந்தில்குமாரை சந்தித்து 25 ஆயிரம் ரூபாயை முத்துக்குமார் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட செந்தில்குமார், ஆய்வாளர் பாபுவிடம் வழங்கியபோது, லஞ்ச ஒழிப்புப் போலீசார், அவரை கைது செய்தனர். பாபுவுக்கு உடந்தையாக செயல்பட்ட செந்தில்குமாரையும் கைது செய்தனர்.

கடலூர் தௌலத் நகரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், 35 லட்சம் ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 6 வங்கிகளில் லாக்கர் இருப்பதும், 45 வங்கிக் கணக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கடலூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் வாங்கியதற்கான 505 பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அவரின் வங்கி லாக்கர்களில் போலீஸார் சோதனை நடத்தவுள்ளனர்.

பாபுவின் உதவியாளர் செந்தில்குமார் பினாமியாக செயல்பட்டது தெரியவந்தது. சேலம் ஆத்தூரில் உள்ள அவரது வீட்டிலும் 8 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 100 பவுன் மற்றும் 15 வங்கி கணக்கு புத்தகங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செந்திலின் வீட்டை அடையாளம் காட்டுவதற்காக வந்த பாபுவின் மனைவி மங்கையற்கரசியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

2006-ம் ஆண்டு ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து துறையில் பாபு பணியாற்றிய போதும், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் பினாமியான செந்தில்குமார் வீட்டில் இதேபோல் பாபு-வுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைபற்றப்பட்டன. இந்த வழக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்