சாமி திரைப்பட பாணியில் நான் போலீஸ் இல்லை பொறுக்கி என கூறி கத்தி முனையில் முதியவரை மிரட்டி கொலை செய்து விடுவதாக கூறி ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை பறித்து சென்ற ஆய்வாளர், துணை நடிகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் முத்தையா(74), இவர் அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இரவு 11 மணிக்கு ஆய்வாளர் தாம்சன், அவருடன் துணை நடிகை, விசிக பிரமுகர் மூன்றுபேரும் அத்துமீறி முத்தையா வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
முத்தையாவின் கழுத்தில் கத்தியை வைத்து ஆய்வாளர் தாம்சன், விசிக பிரமுகர் பாணடியன், அவரது மனைவியும் துணை நடிகையுமான சஜினி ஆகியோர் ரூபாய் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லையென கூறியதும் கொலை செய்து விடுவதாக கூறி அவரது மனைவியையும் ஆபாசமாக பேசிய ஆய்வாளர் தாம்சன், சாமி திரைப்படத்தில் விக்ரம் பேசுவதுபோல் `நான் போலீஸ் இல்லை பொறுக்கி’ என்று கூறியுள்ளார்.
மேலும் ராயபுரத்தில் மீனவ நண்பர்கள் எனக்கு தெரிந்தவர்கள் உள்ளனர். அவர்களிடம் கூறினால் உங்களை கொலை செய்து கடலில் வீசி விடுவார்கள் என்று மிரட்டியுள்ளார். காவல் ஆய்வாளர் தாம்சன் தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால் 72 வயதான முத்தையா உயிருக்கு பயந்து அவர்கள் கேட்டதுபோல் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்கோ அல்லது வெளியில் யாரிடமாவது சொன்னாலும், உங்கள் மகனை கொலை செய்து ஆந்திராவில் வைத்து எரித்து விடுவதாகம் மிரட்டியுள்ளார். வீட்டிற்குள் இரவு சுமார் 11 மணியளவில் புகுந்த மூவரும் நள்ளிரவு 2.15 மணிவரை பணம் கேட்டு மிரட்டி முத்தையாவின் தூக்கத்தை கெடுத்ததாக சோகமாக தெரிவித்தார்.
மூவரும் வீட்டை விட்டு சென்றதும் வெளியூரில் உள்ள முத்தையா அவரது மகன் எட்வினுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த எட்வின் மறுநாள் காலை சென்னை வந்ததும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கமிஷ்னர் ஏ.கே விஸ்வநாதனிடம் கொடுத்தனர்.
கொலை மிரட்டல் விடுத்து காசோலை பறித்துச் சென்ற காவல் ஆய்வாளர் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதின் பேரில் பீர்க்கன்கரணை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தாம்சன், துணை நடிகை சஜினி, விசிக பிரமுகர் பாண்டியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் தாம்சன் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் உள்ளவர். அவர் மீது லஞ்சஒழிப்பு துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்குப்பதிவிற்குப் பிறகு தலைமறைவான அனைவரையும் பிடித்து காசோலையை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என்று முத்தையா கோரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.