சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரிப்பட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் அங்கிருந்து அதிவேகமாக தப்பிச் சென்றனர். இந்நிலையில், அயோத்தியாபட்டணம் அரசு சோதனைச்சாவடியில் காவல்துறையினர் அதிவேகமாக வந்த அந்த காரை நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த காரை துரத்தி சென்றுள்ளனர்.
இதனிடையே காவல்துறையினர் வாக்கி டாக்கி மூலமாக மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சொகுசு வாகனம் வருவதாக கூறப்பட்ட சாலையை நோக்கி அம்மாபேட்டை ரோந்து போலீசார் எதிர்திசையில் வந்தனர். அப்போது குமரகிரி பிரதான சாலையில், அந்த காரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.
அப்போது, தப்பி ஓட முயன்ற 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரையும் சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இருவரும் அம்மாபேட்டை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் 16 வயது சிறுவன் குடும்பத்திற்கு சொந்தமான அந்த காரை அவரது நண்பர் பிரித்திவிராஜ் (வயது 27) என்பவருடன் பொழுதுபோக்காக ஓட்டுவதற்காக எடுத்துச் சென்றதாக தெரியவந்தது.
அப்போது ஏற்பட்ட விபத்தினால் அச்சமடைந்த இருவரும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும், அவர்கள் காவல் துறையினரிடம் கூறினர். காரை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருந்ததையடுத்து சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விபத்து ஏற்படுத்திய கார்
Must Read : மெரினா மணற்பரப்பில் புதைத்து வைத்து சாராய விற்பனை செய்த 3 பெண்கள் கைது... புல்டோசர் உதவியுடன் தோண்டியெடுத்த போலீசார்
இந்நிலையில், விபத்துக்குள்ளான நபர் காயங்களோடு உயிர் தப்பிய நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - திருமலை, சேலம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.