பிரசாரத்தின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் கடந்த சில நாட்களாக கனிமொழி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்களுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பணம் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஏரல் வட்டாட்சியர் முத்துராமலிங்கம் புகார் அளித்தார். அதன் பேரில், கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட ஏழு பேர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
இதனிடையே, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பிரசாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது, விதிகளை மீறியதாக, தேர்தல் பறக்கும் படை அலுவலர் முகிலன் புகார் அளித்தார். அதனடிப்படையில், உதயநிதி ஸ்டாலின், சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் உள்ளிட்டோர் மீது கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also see...ஏன் கருணாநிதியை ஆதரித்தார் பெரியார்?
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.