திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரை கடந்த 12 ஆம் தேதி கொடுங்கையூர் போலீசார் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையின்போது ராஜசேகர் திடீரென உயிரிழந்தார். உடல்நலக் குறைவுடன் இருந்த ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விவகாரம் சர்ச்சையானதால் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்ளிட்ட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
உடல் நலக்குறைவால் ராஜசேகர் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்ததை மறுத்து, தனது மகனை காவல் துறையினர் அடித்துக் கொன்றுவிட்டதாகவும், ராஜசேகருக்கு உடல்நலத்தில் எந்த குறையும் இல்லை எனவும் அவரின் தாயார் உஷா ராணி குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், தனது மகன் மரணம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது மகனின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுத்தர வேண்டும் எனவும் ராஜசேகர் குடும்பத்தார் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து ராஜசேகர் மரண வழக்கு தொடர்பாக உரிய விளக்கத்துடன் கூடிய அறிக்கையை 4 வார காலத்துக்குள் சமர்பிக்க சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் விசாரணை கைதி ராஜசேகரின் மரணம் தொடர்பான முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ’ராஜசேகரின் பிரேதப் பரிசோதனையில், அவரது இடது தொடை, கைகள் மற்றும் கால் முட்டி பகுதிகளில் ரத்தக்கட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜசேகர் உடலில் மொத்தம் 4 வெளிக்காயங்கள் இருந்ததாகவும், காயங்களால் மரணம் நிகழந்ததாக உறுதியாக கூறமுடியாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் முதல் காயம் ராஜசேகரின் மரணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னும், இரண்டு மற்றும் மூன்றாம் காயம் 18 மணி நேரத்துக்கு முன்னும், நான்காவது காயம் 4 நாட்களுக்கு முன்னும் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜசேகரின் இதயத்தில் ரத்தக்கட்டு ஒன்று இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் உள்ள அனைவருக்கும் இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ’ராஜசேகர் மரணம் தொடர்பாக உடற்கூராய்வு அறிக்கை வெளியாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் 4 காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த 4 காயங்களும் எப்போது உருவானது எனவும் அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
176 - 1(a) வழக்கு பதிவு செய்யப்பட்டு மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், காவல் துறை விசாரணையின் போது ராஜசேகருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்த அவர், எதனால் ராஜசேகர் இறந்தார் என கண்டறிய விஸ்ரா ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது எனவும் அதன் அறிக்கை முடிவில் தான் மரணம் தொடர்பான முழு விவரமும் தெரியவரும் எனக் கூறினார்.
மேலும், உடலை வாங்கச் சொல்லி அவரது குடும்பத்தாரிடம் காவல் துறை சென்றாலே பேரம் பேசுவதாக அவர்கள் சொல்லிவருகின்றனர். மேலும், காவல் துறையினர் ராஜசேகர் குடும்பத்தாரிடம் எந்தவிதமான பேரமும் பேசவில்லை. அது பொய். என தெரிவித்த அவர் ராஜசேகர் மரணத்துக்கும் காவல் துறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.