தற்கொலை செய்துகொண்ட கரூர் மாணவியின் தாயார், உறவினர்களை தாக்கிய காவல் ஆய்வாளர்.. மா. கம்யூ., கண்டனம்!
தற்கொலை செய்துகொண்ட கரூர் மாணவியின் தாயார், உறவினர்களை தாக்கிய காவல் ஆய்வாளர்.. மா. கம்யூ., கண்டனம்!
தற்கொலை செய்துகொண்ட கரூர் மாணவியின் தாயார், உறவினர்களை தாக்கிய காவல் ஆய்வாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட கரூர் மாணவியின் தாயார், உறவினர்களை தாக்கிய காவல் ஆய்வாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் பாலியல் வன்கொடுமை காரணமாக 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, தற்கொலை சம்பவம் குறித்து புகார் அளிக்க சென்ற மாணவியின் தாய், உறவினர்களை போலீசார் தாக்கியுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட கரூர் மாணவியின் தாயார், உறவினர்களை தாக்கிய காவல் ஆய்வாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்த மாணவி (19.11.2021) அன்று “பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார் ஜெயந்தி வெங்கமேடு காவல் நிலையத்திற்கு, அன்று இரவிலேயே தன்னுடைய உறவினர்களான சுந்தரம், தமிழரசன், கார்த்தி, லிச்சா, ஜெயலட்சுமி ஆகியவர்களை உடன் அழைத்து சென்றிருக்கிறார்.
அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன், புகார் மனுவை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியிருக்கிறார். கார்த்திக் என்பவரை “என்னடா இப்படி உட்கார்ந்திருக்கிற” என சொல்லி தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார்.
மேலும் கார்த்திக்கை லாக்கப்பில் தள்ளி அடைத்ததுடன். “ஏன் அவரை அடிக்கிறீர்கள்” எனக் கேட்ட தமிழரசன், லீச்சாவையும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.
இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்தநாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும் அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார். காவல்துறையின் இத்தகைய தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மிருகத்தனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை உடனடியாக கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே கணவரை இழந்து தற்பொழுது மகளையும் இழந்து துன்பத்தில் உழலும் மாணவியின் தாய் ஜெயந்திக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
கடந்த ஒருவாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சில மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக் கமிட்டி (விசாகா) உடனடியாக அமைத்து, விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு புகார் அளித்திட விழிப்புணர்வு தரப்ப்பட வேண்டும். பாலியல் புகார் தரப்பட்டால் அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.