தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. இந்நிலையில் அதே போன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் முறையிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் மீது வழக்குப்பதிய வைத்துள்ளார். போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய காரணம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. கோவில்பட்டி தினசரி சந்தையில் வாழை இலை கடை வைத்துள்ளார். மேலும் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இதனால் சமூகம் சார்ந்த விவகாரங்களில் செல்லத்துரை அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனை வாசலில் நின்றபோது விசாரணைக்கு போலீசாரால் அழைத்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால், விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார், காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் காட்டுப் பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. கடுமையான ரத்தகாயங்களுக்கு ஆளான செல்லத்துரை மறுநாளே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பவுல்ராஜ் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரத்தகாய ஆதாரங்களை வைத்து தொடர்புடைய ஒன்பது போலீசார் மீதும் வழக்குப் பதிவு உத்தரவிட்டார். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கோவில்பட்டி போலீசார் இழுத்தடித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்கு பதியாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.
நீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து, செல்லத்துரை தாக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கோவில்பட்டி காவல்நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தாக்குதல் நடந்தபோது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய, ஆய்வாளர் பவுல்ராஜ், உதவி ஆய்வாளர்கள் ராஜபிரபு, மணிமாறன், அந்தோணி திலிப், காவலர்கள் முத்துப்பாண்டி, ஹரிபாலகிருஷ்ணன், ராஜசேகர், ஜான், ஜெயபால் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சென்னையில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது..
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பவுல்ராஜ் தற்போது பதவி உயர்வு பெற்று நாகர்கோவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளான நபர், தனது நீதிப் போராட்டத்தினால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளார். முறையான விசாரணை நடக்குமா? பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா?
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்