• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மரத்தாலான சாமி சிலைகள் மட்டுமே டார்கெட்... பணக்காரர்களுக்கு திருடி விற்பனை செய்த இருவர் கைது

மரத்தாலான சாமி சிலைகள் மட்டுமே டார்கெட்... பணக்காரர்களுக்கு திருடி விற்பனை செய்த இருவர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

சென்னையில் மரத்தாலான சாமி சிலைகளை மட்டும் குறிவைத்து திருடிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆட்டோமொபைல் எஞ்சினியரான கோபிநாத்(85) என்பவர் கடந்த 19ஆம் தேதி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அப்புகாரில் வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த 35 ஆண்டுகால பழமைவாய்ந்த இரண்டரை அடி உயர விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாகவும் அவற்றை மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய சேத்துப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மர சிவன் சிலை திருடிய வழக்கில் ஆயிரம்விளக்கு போலீசாரால் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் சேத்துபட்டு போலீசாருக்கு கிடைத்துள்ளது.

பின்னர் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்ற சேத்துப்பட்டு போலீசாரின் விசாரணையில், ஆயிரம் விளக்கு பகுதியில் 3 அடி உயர மரத்தால் ஆன 40 வருட பழமையான சிவன் சிலையை திருடிய வழக்கில் சிட்டி செண்டர் அருகேயுள்ள கபாலி நகரைச் சேர்ந்த முத்து(40) மற்றும் திருட்டு மர சிலைகளை வாங்கும் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி(36) ஆகிய இருவரை ஆயிரம் விளக்கு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு சோதனை செய்தபோது ஆயிரம்விளக்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட முத்து என்பவர்தான் சேத்துப்பட்டு பகுதியில் விநாயகர் சிலையை திருடிய நபர் என்பதும் தெரியவந்தது.

முத்து மரத்தாலான பழமையான சிலைகளை நோட்டமிட்டு அவற்றை திருடி வந்ததும் மேலும் தான் திருடிய மரத்தாலான சிலைகளை ஆலந்தூரில் வசித்து வரும் தமீம் அன்சாரி என்பவரிடம் ரூ.10,000, ரூ.25,000 வரை விற்பனை செய்து வந்தததும் தெரிய வந்தது.

முத்துவிடம் இருந்து திருட்டு சிலைகளை வாங்கும் தமீம் அன்சாரி அதனை பணக்காரர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. புதிதாக வீடு மற்றும் பங்களாக்கள் கட்டும் பணக்காரர்கள் வீட்டு வரவேற்பறையில் பழமையான மரத்தாலான சிலைகளை வைப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதால் முத்துவும் தமீம் அன்சாரியும் பழமையான மரத்தாலான சிலைகளை கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக திருடி வந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக இருசக்கர வாகன மெக்கானிக் வேலை பார்த்து வரும் முத்து, பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களை சரி செய்வதற்காக சென்று அங்குள்ள நபர்களிடம் மரத்தால் ஆன சிலைகள் எங்கெங்கு உள்ளது என கேட்டு அறிந்து கொண்டு பின் திருடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே இவர்கள் மீது தேனாம்பேட்டை, அபிராமபுரம், மயிலாப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மரத்தாலான பழமையான சிலைகள் திருடிய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. பின் ஆயிரம்விளக்கு போலீசாரால் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த சிவன் சிலை மற்றும் விநாயகர் சிலைகளில் சேத்துப்பட்டு போலிசார் விநாயகர் சிலையை வாங்கி உரியவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து மரத்தால் ஆன சிலைகளை வாங்கியது யார் யார் எனவும் ஆயிரம் விளக்கு போலீசார் மற்றும் சேத்துப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: