வேலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ள போலீஸார் கொள்ளை போன நகைகளையும் மீட்டுள்ளனர்.
வேலூரில் இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவற்றை துளையிட்டு கடந்த 15-ம் தேதி உள்ளே சென்ற மர்ம நபர் சுமார் 15 கிலோ 800 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார். மறுநாள் கடை ஊழியர்கள் கடையை திறந்து பார்த்த போது தங்க சங்கிலி, மோதிரம், நெக்லஸ், கம்மல்கள், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒல்லியான தேகம் கொண்ட நபர் ஒருவர் சிங்க முக மூடியை அணிந்துக்கொண்டு கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: பாதுகாப்பானது தாயின் கருவறையும் கல்லறையும் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி தற்கொலை
கொள்ளையன் உள்ளே நுழைந்தது எப்படி :
அடையாளங்கள் தெரியக்கூடாது என்பதற்காக சிங்க முகமூடியுடன் வந்த நபர் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களை ஸ்பிரே கொண்டு மறைந்தது தெரியவந்தது. இந்த சம்பத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மர்மநபர் நகைக்கடையின் பின்புறம் ஏ.சி.யில் இருந்து காற்று வெளியேற அமைக்கப்பட்ட பகுதியை துளையிட்டு உள்ளே வந்தது தெரியவந்தது. முதல் தளத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்து இரண்டாம் தளத்துக்கு சென்று, விலையுயர்ந்த வைரம், பிளாட்டினம் நகைகள் என 15 கிலோ 800 கிராம் நகைகளை கொள்ளையடித்த பின்னர் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் வழியாக திரும்பி சென்றதை போலீஸார் உறுதி செய்தனர்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள் :
நகைக்கடையில் பதிவான கைரேகை தடயங்கள் இருசக்கர வாகனம் நிறுத்திமிடத்தில் பதிவான கைரேகை தடயங்களை போலீஸார் சேகரித்தனர். இதனையடுத்து நகைக்கடையில் துளையிட்டு திருடும் கொள்ளையர்கள் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.வேலூர் பகுதியில் நகைக்கடைகளில் துளையிட்டும் திருடும் கும்பலின் நடமாட்டம் குறித்தும் போலீஸார் விசாரித்தனர். நகைக்கடையில் எடுக்கப்பட்ட கைரேகை தடயங்களையும் பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். மேலும் கடைக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்.. குழந்தை மரணம் - அரக்கோணத்தில் விபரீதம்
யார் அந்த சிங்க முகமூடி மனிதன் :
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மெலிதான உடலமைப்பு கொண்டு நபர் ஒருவர் தோளில் பையை மாட்டிக்கொண்டு சந்தேகத்திற்கிடமான வகையில் பேருந்து நிலையம் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த நபர் குறித்து போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். இதற்கிடையில் நகைக்கடையில் சேகரிக்கப்பட்ட கைரேகையானது பழைய குற்றவாளியான குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்காராமன் என்பவரது கைரேகையுடன் ஓரளவு ஒத்துப்போனது. இரண்டு பேரின் உடலமைப்பு ஓரள்வு ஒத்துப்போனதால் அவரை பிடித்து விசாரணையில் இறங்கினர்.
மயானத்தில் மீட்கப்பட்ட நகைகள்:
போலீஸாரின் விசாரணையில் டிக்காராமன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் நகைகள் திருடப்பட்ட கடைக்கு டிக்காராமை அழைத்துச்சென்ற போலீசார், சிங்க முகமூடியையும் அணிவித்து ஆராய்ந்தனர்.இந்த நிலையில் டிக்காராமனின் தாய், மனைவி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள மயானத்தில் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக டிக்காராமன் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப்பகுதிக்கு சென்று தோண்டிப் பார்த்த போலீசார் அங்கு மறைத்து வைத்திருந்த அனைத்து நகைகளை மீட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Diamond, Gold, Gold Robbery, Gold Theft, Tamil News