• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குழி தோண்டினால் குபேரனாகலாம்..! போலிச் சாமியார் கைது!

குழி தோண்டினால் குபேரனாகலாம்..! போலிச் சாமியார் கைது!

கைது செய்யப்பட்ட போலி சாமியார்

கைது செய்யப்பட்ட போலி சாமியார்

புதையல் கிடைக்கும் என்ற பேராசையால், பரிகார பூஜைக்காக, சுப்பிரமணி கேட்ட இரண்டு கிலோ வெள்ளி மற்றும் ரொக்கமாக சில ஆயிரங்களையும் ராமசாமி கொடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதையல் எடுத்து தருவதாகவும், அதற்கு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறி 12 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகமளிக்கும் வகையில் 3 பேர் நின்றிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ஒன்றரை அடி உயரம் உள்ள சிதம்பர நடராஜர் சிலை இருந்துள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ராசிபுரத்தை சேர்ந்த சரவணமகேஷ், உதயகுமார் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அச்சிலையை ராமசாமி என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாக மூன்று பேரும் கூறியுள்ளனர். இதையடுத்து ராமசாமியை அழைத்து வந்து விசாரித்த போது புதையல் மோசடி அம்பலமானது...

சந்திரசேகரபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த ராமசாமி என்பவர் கடந்த 2 வருடங்களாக கால் மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மூட்டுவலிக்கு சிகிச்சைபெற, மலவேப்பங்குட்டையில் குறி சொல்லும் நடுகோம்பையை சேர்ந்த சாமியார் சுப்ரமணியை ராமசாமி அணுகியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.

அப்போது, சுப்ரமணி, தான் சாமியாடி குறி சொல்வதாகவும் அந்த சமயத்தில் வந்து நீ குறையை கூறினால் தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதை நம்பி ராமசாமியும் குறி கேட்க சென்றுள்ளார். அப்போது, ராமசாமி தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும் அதை எடுக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் சாமியார் சுப்பிரமணி கூறியுள்ளார்.

புதையல் கிடைக்கும் என்ற பேராசையால், பரிகார பூஜைக்காக, சுப்பிரமணி கேட்ட இரண்டு கிலோ வெள்ளி மற்றும் ரொக்கமாக சில ஆயிரங்களையும் ராமசாமி கொடுத்துள்ளார்.

சில மாதங்கள் கழித்து ராமசாமி வீட்டிற்கு வந்த சாமியார் சுப்ரமணி, பரிகார பூஜை செய்துவிட்டு நள்ளிரவில் தோட்டத்தின் ஒருபகுதிக்கு போய் குழி தோண்டியுள்ளார்.

அப்போது மண்ணுக்குள் ஒன்றரை அடி உயரத்தில் சிதம்பரம் நடராஜர் சிலை இருந்துள்ளது. புதையல் வரும் என்றால் வெறும் சாமிசிலை மட்டும் வருகிறதே என்று கேட்ட ராமசாமியிடம், சிலையே புதையல் தான் என்றும், சில நாட்கள் கழித்து ஒரு கோடி ரூபாய்க்கு சிலையை விற்றுத் தருவதாகவும், சாமியார் சுப்பிரமணி கூறியுள்ளார்.

அப்போது மீண்டும் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி சுமார் 6 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லாததால், ராமசாமி தனது நிலத்தை அடமானம் வைத்து 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

சிலையை விற்றுத்தருவதாக சாமியார் சுப்பிரமணி சொன்னதை நம்பிய ராமசாமி சிலையை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். சிலையை விற்றுத்தராமல், சாமியார் சுப்பிரமணி காலம் தாழ்த்திவந்ததால், ஒரு ஆண்டு ஓடிவிட்டது.

ராமசாமி தொடர்ந்து வற்புறுத்தியதால், சிலையை மீண்டும் எடுத்த இடத்திலேயே புதைத்துவிடுமாறும், 60 நாட்கள் கழித்து அதை தோண்டி எடுத்து விற்றுத்தருவதாகவும் சாமியார் கூறியள்ளார்.

சரியாக 60 நாட்கள் கழித்து சிலையை புதைத்த இடத்தில் ராமசாமி தோண்டிய போது, அங்கு சிலை இல்லை. அதிர்ச்சியடைந்த ராமசாமி சாமியார் சுப்பிரமணியிடம் கேட்ட போது, நீ புதைத்த இடத்தில் சிலை இல்லை என்றால் நான் என்ன செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.

புதையல் கிடைக்கும் என்ற தனது பேராசையை நனவாக்க 12 லட்சம் ரூபாய் செலவு, ஏமாற்றப்பட்டு மனமுடைந்த ராமசாமி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற போது தான் போலீசார் சாமி சிலையை மீட்டுள்ளனர்.

போலீசாரிடம் சிக்கிய பிறகு தான் ஏமாற்றப்பட்ட விசயத்தை கூறிய ராமசாமி, இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். உடனடியாக போலி சாமியார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: