Home /News /tamil-nadu /

சொமேட்டோ டெலிவரி ஊழியரை தாக்கும் டிராபிக் போலீஸ்.. கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு... நடந்தது என்ன?

சொமேட்டோ டெலிவரி ஊழியரை தாக்கும் டிராபிக் போலீஸ்.. கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு... நடந்தது என்ன?

விருதுநகர் போலீஸ்

விருதுநகர் போலீஸ்

Zomato | விருதுநகரில் வாகன தணிக்கையின்போது அபராதம் விதித்த காவல்துறையை தாக்க முயன்ற சொமேட்டோவில் வேலை செய்யம் இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன தணிக்கை என்பது நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் போக்குவரத்து சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜ், வடக்கு ரத வீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சொமேட்டோவில் உணவுகள் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடும் வெங்கடேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அங்கு சோதனையில் ஈடுபட்ட போது ஆவணங்கள் சரியாக இல்லாததால் அவருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இளைஞருக்கும் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளருக்கு கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியில் அபராத தொகையை செலுத்த வீட்டில் இருந்து பணம் எடுத்து வருவதாக இளைஞர் கூறி சென்று விட்டு பின்னர் வந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் சுதாரித்துக்கொண்ட சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தடுக்கவே அவரது சட்டையை கிழித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில்  வைக்க உத்தரவிட்டனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக இணையத்தில் வீடியோ வைரலாகிவருகிறது. அதில், போக்குவரத்து காவல், நடுரோட்டில் வைத்து சொமேட்டோ இளைஞரை அடித்து இழுத்துச் செல்கிறார்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி