ஸ்பிளண்டர் பைக்குகள் மட்டும் திருட்டு: 2 ஏக்கரில் வீடு: கைதான திருடன் - 25 பைக்குகள் பறிமுதல்

ஸ்பிளண்டர் பைக்குகள் மட்டும் திருட்டு: 2 ஏக்கரில் வீடு: கைதான திருடன் - 25 பைக்குகள் பறிமுதல்

ஸ்பிளண்டர் பைக் திருடன்

சென்னையில் ஸ்பிளண்டர் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய திருடனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் என்பவர் சென்னை கோயம்பேட்டில் தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக ஸ்பிளண்டர் பிளஸ் பைக் ஒன்றை வாங்கி அதற்கு பூஜை போட்டு வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். பின்னர் தூங்கச் சென்ற திலீப் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டு வாசலில் பூஜை போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆசை ஆசையாக வாங்கிய பைக், வாங்கிய ஒரே நாளில் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த திலீப் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி ஒரு புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் வாங்கி தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அவர் தூங்கி எழுந்த போது அவருடைய இரு சக்கர வாகனம் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து காணாமல் போவதாக கோயம்பேடு காவல் புகார்கள் குவிந்தன.
இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், இரண்டு நபர்கள் ஸ்பிளண்டர் பிளஸ் இரு சக்கர வாகனங்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்களின் அடையாளங்களை வைத்து சோதனை செய்த போது பழைய குற்றவாளியான வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சின்ன பள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பது தெரிந்தது.

போலீசார், வேலூர் சென்று யுவராஜை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைதான யுவராஜ், கோயம்பேடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வேலூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
யுவராஜூம் அவரது கூட்டாளி சரத்பாபுவுடன் சேர்ந்து வேலூரில் இருந்து பேருந்து மூலம் சென்னை கோயம்பேடு வந்து குடியிருப்பு பகுதிகளிலும் சாலையோரமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பெளண்டர் பைக்கை மட்டும் திருடிச் சென்று வேலூர் அடுத்த குடியாத்தம் பகுதிகளில் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை விற்று வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்பெளண்டர் பைக்கை உடைத்து திருடுவது சுலபமாக இருப்பதாலும் மலைப்பகுதிகளில் செல்ல வசதியாக இருப்பதாலேயே யுவராஜ் இந்த பைக்கை தேடி தேடி திருடிச் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. குடியாத்தம் அருகில் மலைப்பகுதிகளில்தான் திருடிய பைக்கை யுவராஜ் விற்றுள்ளார். திருட்டு பைக்குகளை விற்றே குடியாத்தம் பகுதிகளில் 2 ஏக்கரில் புதிதாக வீடு ஒன்றை யுவராஜ் கட்டி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்கும் மேலாக பைக்கில் திருட்டில் ஈடுபட்டு வந்த யுவராஜின் கூட்டாளி சரத்பாபு தலைமறைவாகி உள்ளார். அவரிடம் 40 திருட்டு வாகனங்கள் இருப்பதாக தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் யுவராஜ் விசாரணையில் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் சரத்பாபுவின் 2 மனைவிகளில் ஒருவரான ஆர்த்தி என்பவரை திருட்டு வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: