போலீசை பழிவாங்க காவலர் குடியிருப்புகளில் மட்டுமே சைக்கிள்கள் திருடியவர்கள் கைது!

போலீசை பழிவாங்க காவலர் குடியிருப்புகளில் மட்டுமே சைக்கிள்கள் திருடியவர்கள் கைது!

சைக்கிள் திருடர்கள் கைது

கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் மற்றும் கதிரிடமிருந்து 9 விலை உயர்ந்த சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் மொத்தம் எவ்வளவு சைக்கிள் திருடினார்கள்? அதனை யார் யாரிடம் விற்பனை செய்துள்ளார்கள் என்பதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காவல்துறையினரை பழிவாங்குவதற்காக காவலர் குடியிருப்புகளில் மட்டுமே சைக்கிள்கள் திருடி வந்த, சைக்கிள் திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

எழம்பூர் காவலர் குடியிருப்பில் தினமும் ஒரு விலை உயர்ந்த சைக்கிள் என கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சைக்கிள்கள் காணாமல் போனதையடுத்து, காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள், தொடர்ச்சியாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக எழும்பூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் தினமும் காவலர் குடியிருப்புக்குள் வந்து சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவானது. இதனையடுத்து அவர்களை பிடிப்பதற்காக நேற்றிரவு நள்ளிரவு போலீசார் மஃப்டியில் எழும்பூர் காவலர் குடிபியிருப்பு பகுதியில் காத்திருந்தனர்.

அப்போது சைக்கிள் திருடுவதற்காக, அந்த இரண்டு நபர்களும் எழும்பூர் காவலர் குடியிருப்புக்குள் வந்து, பின் சைக்கிளை திருடி விட்டு வெளியே வந்துள்ளனர். அங்கு வாசல் பகுதியில் காத்திருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சைக்கிள் திருடர்களான கதிர்(33)மற்றும் காஜா மொய்தீன்(38) ஆகிய இருவருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. காஜா மொய்தீன் சென்னையில் தங்கி துறைமுக பகுதியில் லோடுமேனாக பணியாற்றி வந்துள்ளார். கதிர் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தண்ணீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்ததுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி பிளாட்ஃபார்ம் பகுதிகளில் தங்கி வந்துள்ளதால் அங்கு மது குடிப்பதில் இவர்கள் நண்பர்களாக மாறியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக காஜா மொய்தீனுக்கு வேலை பறி போயுள்ளது. அதன் காரணமாக காஜா மொய்தீன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு திருவல்லிக்கேணி காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் கதிர் உதவியுடன் காவல்துறையினரை பழிவாங்குவதற்காக காவலர் குடியிருப்பு பகுதிகளில் திருடுவதற்கு காஜா மொய்தீன் திட்டுமிட்டுள்ளார்.
இருவரும் இணைந்து, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக காவலர் குடியிருப்புகளில் உள்ள விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டும் திருடுவதாக திட்டம் போட்டுள்ளனர்.

Also read... பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்வு...!

திட்டமிட்டபடி ஒவ்வொரு காவலர் குடியிருப்பிலும் தினந்தோறும் ஒரு சைக்கிளை திருடி அவற்றை குறைவான விலைக்கு விற்று வந்துள்ளனர். ரூபாய் 10,000 முதல் 15,000 விலை மதிப்பு கொண்ட சைக்கிள்களை திருடி அவற்றை ரூபாய் 500, 1000 என விற்று அந்த பணத்தில் இருவரும் மது குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவலர் குடியிருப்புகளில் இவர்கள் விலை உயர்ந்த சைக்கிளை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் மற்றும் கதிரிடமிருந்து 9 விலை உயர்ந்த சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் மொத்தம் எவ்வளவு சைக்கிள் திருடினார்கள்? அதனை யார் யாரிடம் விற்பனை செய்துள்ளார்கள் என்பதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: