முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆடம்பர கார்கள், உல்லாச பயணம்... போலீஸ் என கூறி வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளையடித்த கும்பல் பற்றிய பகீர் தகவல்கள்!

ஆடம்பர கார்கள், உல்லாச பயணம்... போலீஸ் என கூறி வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளையடித்த கும்பல் பற்றிய பகீர் தகவல்கள்!

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

ஒரே பாணியில் பல கொள்ளை சம்பவங்களை நிகழ்த்திய கொள்ளை கும்பல் தலைவனை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் கொள்ளை கும்பலில் இதுவரை 11 பேரை கைதுசெய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

போலீஸ் என்று கூறி ரூ.1.40 கோடியை கொள்ளையடித்த கும்பலை காவல்துறை தனிப்படை அமைத்து கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 3-ம் தேதி அதிகாலை ஆந்திராவில் இருந்து நகை வாங்குவதற்காக வந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகிய இருவரிடமிருந்து ஒரு கும்பல் போலீஸ் என கூறி அவர்கள் கொண்டு வந்திருந்த ரூபாய் 1 கோடியே 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக பூக்கடை போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இம்ரான் ஊட்டியில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இம்ரானின் சகோதரர் இம்ராஸ், இல்தியாஸ், மும்தாஜ் ஆகியோரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இமானுவேல் மற்றும் அன்பரசன் ஆகிய இருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன், ராஜேஷ், அசோக், பாஷா, மற்றும் பாஷாவின் மனைவி ஆலிஷா ஆகிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்:

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் இம்ரான் தான் முக்கிய குற்றவாளி என்பதும் கொள்ளை கும்பல் தலைவன் என்பதும் தெரிய வந்தது. இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, சிபிசிஐடி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், குடியாத்தம் ,தாம்பரம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணம் பறித்தல், வழிப்பறி, ஹவாலா மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கொள்ளையடிக்க பயன்படுத்தும் முறை:

கடந்த டிசம்பர் மாதம் வரை வழிப்பறி வழக்கு ஒன்றில் இம்ரான் சிறையில் இருந்துள்ளார். அங்கு இதே போல போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இவரது கூட்டாளி ஒருவர் பிப்ரவரி 2-ம் தேதி ஆந்திராவிலிருந்து இருவர் நகை வாங்குவதற்காக சவுகார்பேட்டை வரவுள்ளதாகவும் அவர்கள் எந்த ரயிலில் வருவார்கள்? யாரிடம் நகை வாங்க போகிறார்கள் என இம்ரானுக்கு தகவல் சொல்லியுள்ளார்.

Also Read : உஷார்.. இனி இதுக்கும் அபராதம்.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

இந்த தகவலின் அடிப்படையில்தான் பிப்ரவரி 3 ம் தேதி அதிகாலை ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோரிடம் இருந்து ரூபாய் 1.40 கோடி பணத்தை போலீஸ் என கூறி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கும் தினத்தன்று இம்ரானின் சகோதரர் இம்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்து நகை வியாபாரிகள் செல்லும் பாதை குறித்து தகவல் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார் என்பதும் அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர் கொள்ளைகள்:

போலீசாரின் தொடர் விசாரணையில் இம்ரான் தலைமையிலான இந்த கும்பல் பல ஆண்டுகளாக குருவியாக செயல்பட்டு வரும் நபர்களிடமும், நகை வாங்க வரும் நகை வியாபாரிகளிடமும் போலீஸ் என கூறி இதே பாணியில் கொள்ளையடித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடுங்கையூர் பகுதியில் தொழிலதிபர் விஸ்வநாதன் என்பவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் எனக் கூறி ரூபாய் 70 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 நபர்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இம்ரானின் குழுவினர் என்பதும் தெரியவந்தது.

வழக்குகளில் இருந்து தப்பிக்க கொள்ளையடித்த பணத்திலேயே சட்டம் படித்த சம்பவம் :

15-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய இம்ரான், அனைத்து வழக்குகளில் இருந்தும் தப்பிக்க கொள்ளையடித்த பணத்திலேயே BA.BL சட்டப் படிப்பை முடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தான் கொள்ளையடித்த பணத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியாக தொகை ஒதுக்கி தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அந்த வகையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன் தற்போது சவுகார்பேட்டையில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டு கொடுத்ததும் இதற்கு முன் நடந்த கொள்ளை சம்பவங்களில் கொள்ளையர்களுக்கு உதவியாக இருந்ததும் தெரியவந்தது.

கொள்ளையடித்த பணத்தில் சொகுசு பயணம் :

சவுகார்பேட்டையில் கொள்ளையடித்த பணத்தில் கூட்டாளிகளுக்கு பங்கு கொடுத்துவிட்டு கொடைக்கானலில் உல்லாச ரிசார்ட்டில் ஜாலியாக இம்ரான் இருந்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் ஊட்டி, பாண்டிச்சேரி, ஒசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் தனித்தனியாக சென்று சொகுசாக இருந்து வந்துள்ளனர்.

Also Read : மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இனி அவகாசம் கிடையாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டம்..!

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இரண்டு விலை உயர்ந்த நான்கு சக்கர வாகனங்கள் இம்ரான் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவரை இந்த கொள்ளை சம்பவத்தில் இம்ரான், இம்ராஸ், இல்தியாஸ், மும்தாஜ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன், இமானுவேல், அன்பரசன், ராஜேஷ், அசோக், பாஷா,  பாஷாவின் மனைவி ஆலிஷா என 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆலிஷா கைக்குழந்தையுடன் உள்ளதால் அவரை நீதிமன்ற பிணையில் மேஜிஸ்ட்ரேட் விடுவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 70 லட்சம் பணமும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற மூன்று நபர்களை தேடி வருகின்றனர்.

First published:

Tags: Cheating case, Chennai, Crime News, Theft