கணவனைக் கொன்று புதைத்த மனைவி... 18 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

மாதிரி படம்

சேலம் அருகே கணவனைக் கொன்று புதைத்து விட்டு தப்பியோடிய பெண்னை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • Share this:
சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள செஞ்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகிரி. இவரது மனைவி பூங்கொடி. இருவரும் கூலி  தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணவனைப் பிரிந்து தனியாக பூங்கொடி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுக்காக மனைவியிடம் சமாதானம் பேசி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக ராஜகிரி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

கடந்த 18 நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் இருவரும் உறவினர்கள் திருமணத்திற்கு சென்றுவிட்ட நிலையில் கணவன் மனைவி இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

வெளியூர் சென்ற குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பிவந்ததும் தந்தை எங்கே என கேட்டபோது அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று உள்ளதாக பூங்கொடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதாக கூறி சென்ற பூங்கொடி இதுவரை வீடு திரும்பவில்லை.

இன்று வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சூரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி துர்நாற்றம் வீசிய இடத்தில் தோண்டி பார்த்து உடலை மீட்டனர். உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் அடிக்கடி பூங்கொடி கிருமிநாசினியை தெளித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

Also read... மதுபோதையில் தினசரி தகராறு - கணவனின் காதில் பூச்சி மருந்தை ஊற்றிக் கொன்ற மனைவி

பூங்கொடி, ராஜகிரியை சரமாரியாக தாக்கி கொலை செய்து, யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து விட்டு ஒரு வாரமாக அந்த வீட்டிலேயே தங்கி இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பூங்கொடியை தேடி வருகின்றனர். கொலை நடந்து 18 நாட்களுக்கு பிறகு துர்நாற்றம் ஏற்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: