மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை உயிரிழப்பு... பெண் சிசுக் கொலையா? காவல்துறை விசாரணை

குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை

 • Share this:
  கரூரில் மூன்றாவதாக பிறந்த பெண்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தததாக கூறப்படும் நிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டியெடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள போத்தராவுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் சிவசிங்கப்பெருமாள். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

  இந்நிலையில் கடந்த 10-ம் தேதி பஞ்சப்பட்டி அரசு மருத்துவமனையில் சங்கீதாவிற்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்ததால் பெற்றோர் சோகத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

  அப்போது மருத்துவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், 14-ம் தேதி குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர்.

  அப்போது, ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தம்பதியர் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் குழந்தையின் உடலை புதைத்துள்ளனர்.

  இந்நிலையில் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலர், தோகமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கரூர் மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர்கள் முன்பு குழந்தையின் உடலை தோண்டியெடுத்தனர். குழந்தையின் மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: