POLICE ARE INVESTIGATING A WOMAN WHO LEFT A GIRL UNCONSCIOUS ON THE ROAD IN THE THIRUPPUR DISTRICT VIN
திருப்பூரில் சிறுமியை மயங்கிய நிலையில் ரோட்டில் விட்டுச்சென்ற பெண்ணிடம் போலீஸார் விசாரணை
சிறுமியை மயங்கிய நிலையில் ரோட்டில் விட்டுச்சென்ற பெண்
விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சைலஜா என்பதும், கணவரின் பெயர் முத்துசாமி என்பதும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருவதாகவும் தான் ஒரு மருத்துவர் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
திருப்பூர் அருகே 8 வயது சிறுமியை மயங்கிய நிலையில் ரோட்டில் விட்டுச்சென்ற பெங்களூரை சேர்ந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் 8 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். மூச்சுத் தினறலுடன் முகத்தில் சில காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தத 8 வயது சிறுமியை கண்ட அப்பகுதி மக்கள், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே போலீசார் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி அருகே அமர்ந்திருந்த பெண் சிறிது நேரத்தில் சிறுமியை விட்டுவிட்டு தனியாக நடந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை விட்டுச் சென்ற அந்த பெண் என முடிவு செய்து போலீசார் அந்த பெண்ணை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் பெண் ஒருவர் தனியாக நின்றிருப்பதாக அவ்வழியே சென்ற ஒருவர் ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணை சென்று பார்த்தபோது , சிசிடிவி காட்சியில் குழந்தையை விட்டுச் சென்றது இந்த பெண் என தெரியவந்தது.
இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சைலஜா என்பதும், கணவரின் பெயர் முத்துசாமி என்பதும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருவதாகவும் தான் ஒரு மருத்துவர் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார். அதேபோல் எலி மருந்து சாப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதனிடையே விட்டுச் செல்லப்பட்ட 8 வயது சிறுமி இவரின் மகளா , பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு சிறுமியை அழைத்து வந்து விட்டுச் செல்வதற்கான காரணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து போலீசார் அந்த பெண்ணிடம் இன்று மீண்டும் விசாரிக்க உள்ளனர்.