• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆசிரியரிலிருந்து அரசவைக் கவிஞர் வரை.. புலமைப்பித்தன் கடந்து வந்த பாதை

ஆசிரியரிலிருந்து அரசவைக் கவிஞர் வரை.. புலமைப்பித்தன் கடந்து வந்த பாதை

கவிஞர் புலமைப்பித்தன்

கவிஞர் புலமைப்பித்தன்

தமிழையும் காதலையும் ரசித்துக்கொண்டாடிய புலமைப்புத்தனுக்குள் அரசியல் ஆர்வமும் அதிகமாகவே இருந்தது.

  • Share this:
ஆசிரியராக இருந்து அரசவைக்கவிஞராக மாறியவர் புலவர் புலமைப்பித்தன். தமிழைப் படித்து, தமிழை ரசித்து, தமிழாசிரியராகவே பணியாற்றிக்கொண்டிருந்த புலமைப்பித்தனைப் பாடலாசிரியராக அறிமுகம் செய்தவர் இயக்குனர் சங்கர். எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் நான் யார், நீ யார் என்ற பாடலின் வழியாகத் திரைத்துறைக்குள் நுழைந்த புலமைப்பித்தனின் வார்த்தைகள் எம்ஜிஆரின் மனத்தை ஆட்கொள்ளவே, அந்த நொடியில் எம்ஜிஆரின் செல்லக்கவிஞராக மாறினார் புலமைப்பித்தன்.

அன்றுதொடங்கி தமிழ் மணக்கும் பல பாடல்களை எழுதினார் புலமைப்பித்தன். தமிழோடு சேர்த்து காதலும் காமமும் அழகியலும் நிரம்பிய இவரது வார்த்தைகள் வரவேற்பின் உச்சத்தைத் தொட்டன. அடிமைப்பெண்ணில் வந்த ஆயிரம் நிலவே வா பாடலாகட்டும், இதயக்கனியில் வந்த நீங்க நல்லா இருக்கணும் பாடலாகட்டும், இன்பமே உந்தன் பேர் பெண்மையோ பாடலாகட்டும், நினைத்ததை முடிப்பவன் படத்தில் வந்த பூமழை தூவி பாடலாகட்டும், நேற்று இன்று நாளையில் வந்த பாடும்போது நான் தென்றல் காற்று பாடலாகட்டும், ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கொண்டாடவைத்த பாடல்கள்.

எம்ஜிஆருக்காகவே வரிகளையும் வார்த்தைகளையும் வார்த்தெடுத்த கவிஞர்களுள் புலமைப்பித்தன் முக்கியமானவர். பின்னாளில் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கான வசீகரிக்கும் வார்த்தைகளை வடித்துக்கொடுத்திருக்கிறார். உன்னால் முடியும் தம்பி தம்பி பாடல் கமலுக்கான அடையாளப் பாடல்களில் முக்கியமானது என்றால், முத்தமிழ்க்கவியே வருக பாடல் ரஜினிக்கான முக்கியப்பாடலாக உருவெடுத்தது. அந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் புலமைப்பித்தன். ராஜா கைய வெச்சா படத்தில் வரும் மழை வருது மழை வருது குடைகொண்டு வா பாடலும் ஈரமான ரோஜாவே படத்தில் வரும் அதோ மேக ஊர்வலம் பாடலும் புலமைப்பித்தனின் காதல் ரசம் சொட்டும் பாடல்கள்.

தமிழையும் காதலையும் ரசித்துக்கொண்டாடிய புலமைப்புத்தனுக்குள் அரசியல் ஆர்வமும் அதிகமாகவே இருந்தது. எம்ஜிஆர் மீதிருந்த பற்றால் எம்ஜிஆர் தொண்டராகவே அரசியலுக்குள் நுழைந்தவர். ஈழத்தமிழர் விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் தொட்டபோது பிரபாகரன் மீது நேசம் கொண்டார். பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தபோது அவர் அடிக்கடி வந்து, உரையாடி, உணவருந்திச் செல்லும் இடமாக புலமைப்பித்தனின் வீடு இருந்தது.

எம்ஜிஆரால் அரசவைக்கவிஞராக நியமிக்கப்பட்ட புலமைப்பித்தன் கடைசிவரை எம்ஜிஆரின் தொண்டராக, அதிமுகவின் தொண்டராகவே இருந்தார். அதிமுகவின் அவைத்தலைவர் என்பதைத் தாண்டி அரசியலில் மிகப்பெரிய உயரத்தை எட்டாவிட்டாலும்கூட ஒரு கவிஞராக, திரைப்படப் பாடலாசிரியராக, புலவராகத் தனது தமிழ்ப்பங்களிப்பைக் கடைசிவரை ஆற்றிக்கொண்டே இருந்தார். நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் இடம்பெற்ற தாய்மை எனத் தொடங்கும் வளைகாப்புப்பாடல் புலவர் புலமைப்பித்தனின் தமிழாளுமைக்கான சமகால சாட்சியம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: