Home /News /tamil-nadu /

பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசியல் பாதை - ஒரு பார்வை

பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசியல் பாதை - ஒரு பார்வை

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss - ஏறக்குறைய 15 ஆண்டுகாலம் பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமகவின் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    பாமகவின் வளர்ச்சி,  கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

    பாமகவின் புதிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினரும் மருத்துவர் ராமதாசின் மகனுமான அன்புமணி ராமதாஸ் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 25 ஆண்டு காலமாக பாமகவின் தலைவராக இருந்த ஜிகே மணி அப்பொறுப்பில் இருந்து இன்று விடைபெற்றார்.அவர் கவுரவ தலைவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.  25 ஆண்டு காலம் தலைவராக இருந்த ஜிகே மணிக்கு மே 24ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்நிலையில், கட்சியின் எதிர்காலம் கருதி புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வாகியுள்ளார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து களம் கண்டபோது அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

    அன்புமணி ராமதாசின் அரசியல் பாதை

    1968ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகனாக அன்புமணி ராமதாஸ் பிறந்தார். எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படித்துள்ள அன்புமணி ராமதாஸ், லண்டனில் பொருளாதார பட்டப்படிப்பு முடித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய, பசுமைத் தாயகம் அமைப்பிற்கு 1997 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றார்.

    இவர் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த போது ஐநா சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று 2013 மற்றும் 15 ஆண்டுகளில் ஜெனிவாவில் நடந்த ஐநா சபை கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசியுள்ளார். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்தபோதே பாமகவின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க இடம் தர வேண்டும்.. பெற்றோர்கள் கோரிக்கை

    2004ஆம் ஆண்டு முதன்முதலாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 35 வயதான அன்புமணி இளம் வயதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டு பாமக இளைஞரணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம், பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை சட்டம் உள்ளிட்ட மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வந்தார். 2014 ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக பாமக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு பாமக அன்புமணி தலைமையில் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.

    அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவிய பாமக, அந்த தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியைத் தழுவினர். 2019ஆம் ஆண்டு மீண்டும் தருமபுரி தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் தோல்வியடைந்தார்.

    இதையும் படிங்க: தமிழக அரசின் ஊழல் பட்டியல்.. 2 அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும்: அண்ணாமலை பேட்டி

    2019ஆம்ஆண்டு அதிமுக கூட்டணி மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். 1997 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அன்புமணி ராமதாசின் அரசியல் பயணம் , ஏறக்குறைய 15 ஆண்டுகாலம் பாமக இளைஞரணி தலைவராக இருந்து, தற்போது பாமகவின் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Anbumani, Anbumani ramadoss, Dr Ramadoss, PMK

    அடுத்த செய்தி