மூன்றாவது பெரிய கட்சி பாமக என்பது நிரூபணம்: ராமதாஸ் மகிழ்ச்சி

மூன்றாவது பெரிய கட்சி பாமக என்பது நிரூபணம்: ராமதாஸ் மகிழ்ச்சி
ராமதாஸ்
  • Share this:
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக என்பதை உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டு வருகிறது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்தது.

இதில், 36 மாவட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களில் போட்டியிட்ட பாமக 16 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பிறர் என்ற பிரிவில் பாமக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பாமக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக சேலத்தில் 39 ஊராட்சி ஒன்றிய இடங்களில் பாமக வெற்றி பெற்றுள்ளது.ஊராட்சி ஒன்றியங்களைப் பொருத்தவரை, போட்டியிட்டவற்றில் 52 சதவீத இடங்களிலும் மாவட்ட ஊராட்சிகளைப் பொருத்தவரை களமிறங்கிய இடங்களில் 44 சதவீத இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாகவும் பாமக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்  ஊராட்சி ஒன்றியங்களில் பிற கட்சிகளை விட பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி விழுக்காடு தான் அதிகம் என்றும், மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகம் என்றும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க. தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி உவப்புடன் ஏற்றுக் கொள்வதாகவும், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்