• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • மறுபடியும் கேட்கிறேன்... மதுக்கடைகளை திறக்காதீர்... நிரந்தரமாக மூடுங்கள் - ராமதாஸ் கோரிக்கை!

மறுபடியும் கேட்கிறேன்... மதுக்கடைகளை திறக்காதீர்... நிரந்தரமாக மூடுங்கள் - ராமதாஸ் கோரிக்கை!

ராமதாஸ்

ராமதாஸ்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் வருவாய் பெருமளவில் குறைந்து விட்ட சூழலில், அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை உணர முடிகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மட்டும் தான் வருவாய் ஈட்ட முடியும்; அது தான் மிகவும் எளிதான வழி என்று கருதினால் நிதி நிர்வாகத்திலும், மக்கள் நலனைக் காப்பதிலும் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாகத் தான் பொருளாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

  இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித் தான் வர்ணிக்க வேண்டியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழ்நாட்டில் நாளை காலையுடன் முடிவடையவிருக்கும் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை தொடங்கி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். இது மிகவும் ஆபத்தானது; இந்த முடிவைத் திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்தினாலும் கூட, அதை ஏற்காமல் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து விட்டதாகவும், அதன் காரணமாகவே மதுக்கடைகள் திறக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த விளக்கம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

  உயிரைக் குடிக்கும் கொரோனா வைரசின் தாக்கம் எந்த வகையிலும் குறையவில்லை. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா முதல் அலையில் அதிகபட்ச தினசரி பாதிப்பே 6993 மட்டும் தான். ஆனால், இப்போது தினசரி தொற்று அதைவிட 250% அதிகமாக உள்ளது. தினசரி கொரோனா தொற்று குறையும் விகிதம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் போது தினமும் 1500, 2000 என்ற அளவில் உயர்ந்தது. ஆனால், குறையும் போது ஒவ்வொரு நாளும் 1000 அல்லது அதற்கும் கீழாகத் தான் குறைகிறது. கடந்த 6-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வாரத்தில் கொரோனா தொற்று குறையும் அளவு முறையே 989, 973, 1425, 702, 508, 1054, 651 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. முழு ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆனால், இந்த ஆபத்தை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

  கொரோனா வைரஸ் பரவலுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தி மது தான் என்றும், கொரோனா காலத்தில் மது கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மது அருந்தும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது; அதனால் போதையில் இருப்பவர்களை கொரோனா எளிதாக தாக்குகிறது. மது போதையில் இருப்பவர்களால் நிலையாக நிற்க முடியாது; பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட எந்த பாதுகாப்பு விதிகளையும் பின்பற்ற முடியாது. அத்தகைய சூழலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கொரோனா மின்னல் வேகத்தில் பரவும். இந்த ஆபத்துகளை அலட்சியப்படுத்தி விட்டு மதுக்கடைகளை திறப்பது ஏன்? இதற்கான ஆலோசனையை யார் வழங்கியது?

  கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க 13 பேர் கொண்ட அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு குறித்து ஒரே ஒரு முறை தான் அக்குழுவிடம் ஆலோசனை பெறப்பட்டது. அதன்பின், தளர்வுகள் அறிவிக்கப்படும் போது, குறிப்பாக மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் போது, அனைத்துக் கட்சி குழுவினருடன் ஆலோசனை நடத்தாதது ஏன்? இது தான் திமுக அரசு கடைபிடிக்கும் வெளிப்படைத் தன்மையா?

  தேநீர்க்கடைகள் திறக்கப்பட்டால் கொரோனா பரவி விடும்; ஆனால், மதுக்கடைகளை திறந்தால் கொரோனா பரவாது என்று நம்பும் தமிழக அரசின் அறியாமையைக் கண்டு அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. மதுக்கடைகளை திறப்பதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என்பது உள்ளிட்ட தீய விளைவுகள் தமிழக முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்காது. ஏனென்றால், சரியாக ஓராண்டுக்கு முன்பு தான், கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார். அப்படிப்பட்டவர் இப்போது மதுக்கடைகளை தாராளமாக திறந்து விடுகிறார் என்றால் அவருக்கு யாரிடமிருந்து எந்த அளவுக்கு அழுத்தம் வருகிறது? மது ஆலைகளின் அன்பான அழுத்தத்திற்கு பணிந்து விட்டாரா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

  Also read... மாஸ்க் அணிந்த கொரோனா மாதா - தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டி பிரார்த்திக்கும் கிராமவாசிகள்!

  கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் வருவாய் பெருமளவில் குறைந்து விட்ட சூழலில், அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை உணர முடிகிறது. அரசின் வருவாயைப் பெருக்க குறுகிய காலத் திட்டங்கள், நீண்டகாலத் திட்டங்கள் என பல வழிகள் உள்ளன. அரசு விரும்பினால் அந்த வகையில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மட்டும் தான் வருவாய் ஈட்ட முடியும்; அது தான் மிகவும் எளிதான வழி என்று கருதினால் நிதி நிர்வாகத்திலும், மக்கள் நலனைக் காப்பதிலும் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாகத் தான் பொருளாகும். எனவே, தமிழ்நாட்டில் நாளை முதல் மதுக்கடைகளைத் திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடி, வருவாய் ஈட்டுவதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: