சென்னையில் இன்று நடைபெற்ற் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்கு போராடிய வட தமிழக தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக
பாமக தலைவர் ராமதாஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73வது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் தமிழக அரசின் சார்பில் குடியரசுத் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று தேசிய கொடியை பறக்கவிட்டார். இதை தொடர்ந்து தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.
இந்நிலையில், இந்த அணிவகுப்பில் வடதமிழக விடுதலை போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!
இதையும் படிங்க: கம்பீரமாக வலம் வந்த அலங்கார ஊர்திகள்.... சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட குடியரசுதின விழா - புகைப்படங்கள்
தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.