ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை டூ மதுரை.. 'தமிழைத் தேடி' ராமதாஸ் 8 நாள் மாபெரும் பிரச்சாரம்

சென்னை டூ மதுரை.. 'தமிழைத் தேடி' ராமதாஸ் 8 நாள் மாபெரும் பிரச்சாரம்

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் பரப்புரை பயணத்தை அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வளர்ச்சியை பற்றி பல்வேறு கோரிக்கை விடுத்து பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மதுரை வரை 8 நாள் பரப்புரை பயணத்தை அறிவித்துள்ளார். இந்த பரப்புரை பிப்ரவரி 21-ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடங்கி மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையில் வரும் பிப்ரவரி 28-ஆம் நாள் நிறைவடைகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மூத்த மொழியான தமிழின் இனிமை, பழமை, பெருமைகள், சிறப்புகள் ஆகியவை குறித்து மகிழ்ச்சி அடைய ஏராளமான செய்திகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இன்று தமிழின் இருப்பு எவ்வாறு உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது உள்ள தமிழ் இருப்பை பற்றி நினைக்கும் போது பெரும் கவலையும், வருத்தமும் வாட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’ என்பது தான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் ‘எங்கே தமிழ்?’ என்பது தான் எதார்த்தம். தமிழில் பிறமொழிச் சொற்களின் கலப்பு, வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிற மொழிகளில் எழுதப்படுதல், அரசு நிர்வாகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழுக்கு உரிய இடம் மறுக்கப்படுவது போன்றவை காலம் காலமாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அனைத்து இடங்களிலும் தமிழை நிலை நிறுத்த சட்டங்கள் இயற்றியும் கூட நிலைமை மாறாதது வலியை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

Also read : தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை நடைபயணம் - ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் தொடக்கம்!

மேலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான கோரிக்கைகளை வரிசைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார். அவை,

1. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாயப்பாடமாக்க சட்டம் இயற்றி 16 ஆண்டுகள் ஆகியும் கூட தமிழ் இன்னும் கட்டாயப் பாடமாக இல்லை.

2. தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தவிர பிற பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று 18.09.2014-ஆம் நாளில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்தும் அந்த பள்ளிகளிலும் இன்னும் தமிழ் இல்லை.

3. அனைத்துப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் தான் கட்டாயப் பயிற்றுமொழி என்று 23 ஆண்டுகளுக்கு முன் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் கூட தமிழ் இன்னும் பயிற்றுமொழி ஆகவில்லை.

4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட தமிழ் இன்னும் உயர்நீதிமன்ற அலுவல் மொழி ஆகவில்லை.

5. 1956-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

6. தமிழ்நாடு அரசின் அரசாணைகளில் முழுமையாக தமிழ் இல்லை.

7. ஆலயங்களில் தமிழ் ஒற்றை வழிபாட்டு மொழியாகவில்லை. சமஸ்கிருதத்தில் மட்டும் தான் வழிபாடு நடத்தப்படுகிறது. சில ஆலயங்களில் மட்டும் வலியுறுத்திக் கேட்டால் கூடுதலாக தமிழில் வழிபாடு செய்யப்படுகிறது.

8. தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும் கூட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் இல்லை.

9. அன்றாட வாழ்வில் தமிழ் இல்லை. பெரும்பான்மையான வீடுகளில் அம்மா, அப்பா என்ற சொற்களே புழக்கத்தில் இல்லை. மம்மி, டாடி மட்டும் தான் புழக்கத்தில் உள்ளன.

10. தமிழ் இசைக்கு இடமில்லை; அதை வளர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்படவில்லை.

11. தமிழ் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் வேகம் பெறவில்லை.

12. உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளவதாக அறிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai, Madurai, PMK, Ramadoss