தடை செய்யப்பட்ட பிறகும் சட்டவிரோதமாக உபயோகத்தில் உள்ள இ -சிகரெட்டுகளால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதால் அதனை காவல்துறை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், புகையிலை சிகரெட்டுகளை விட மிகக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலும் அவை தடையின்றி தலைவிரித்தாடுகின்றன. இ-சிகரெட்டுகளின் தீமைகள் பற்றி அறியாமல் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வரும் பெரும் கவலையைத் தருகிறது.
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்காக கருவிகள் என்ற பெயரில் தான் இ-சிகரெட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆயின. புகைப்பழக்கத்தை கைவிட முடியாதவர்கள், அதற்கு மாற்றாக இ-சிகரெட்டுகளை பிடிக்கலாம்; அதனால் உடல்நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அவ்வாறு செய்தால் காலப்போக்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விடலாம் என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், புகைப்பழக்கத்திற்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட இ-சிகரெட்டுகளே இப்போது இளைஞர்களை சீரழிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன.
இ- சிகரெட்டுகளை பற்றவைக்கத் தேவையில்லை. சிகரெட் போன்ற வடிவத்தில் இருக்கும் அவற்றை வாயில் வைத்து இழுத்தாலே அதில் உள்ள வேதிப்பொருட்கள் பேட்டரி மூலம் ஆவியாக்கப்பட்டு புகை வெளியாகும். இ-சிகரெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் மனிதர்களை மயக்கக்கூடிய பல வகையான சுவையும், மணமும் கொண்டவை. அதனால் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையான இளைஞர்கள் - மாணவர்களால் அவற்றிலிருந்து மீண்டு வர முடியாது. தமிழ்நாட்டில் இ-சிகரெட்டுகள் பல்வேறு பெயர்களில் சட்டவிரோத சந்தைகளில் கிடைக்கின்றன. 100 முறை இழுக்கக்கூடியவற்றில் தொடங்கி 5000 முறை இழுக்கக்கூடியவை வரை என பல அளவுகளில் இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன.
Also Read: "போலீஸ் என்ன செய்துகொண்டு இருந்தது...?" - சிபிஐ விசாரணை கேட்கும் அண்ணாமலை
புகையிலையை மூலப்பொருளாகக் கொண்ட சிகரெட்களுடன் ஒப்பிடும் போது, சில இ-சிகரெட்டுகளில் நிகோட்டின் அளவு குறைவு என்பதைத் தவிர, இ-சிகரெட்டுகளில் எந்த நன்மையும் இல்லை. ஆனால், தீமைகள் ஏராளமாக உள்ளன. இ-சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், இழுக்கும் அளவு ஆகியவற்றைப் பொருத்து அதன் நிகோட்டின் அளவு மாறுபடும். பல இ-சிகரெட்டுகளில் புகையிலை சிகரெட்டுகளை விட அதிக நிகோட்டின் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இ-சிகரெட்டுகளில் பிரோப்பிலின் கிளைகோல் உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவை மனிதர்களுக்கு பல வகையான புற்றுநோய்களையும், இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை. ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், பலர் இதன் தீமைகளை உணர்ந்தும், சிலர் இதன் தேவைகளை உணராமலும் இ-சிகரெட்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையையே சீரழித்து விடும்.
Also Read : பாஜக தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது.. அண்ணாமலை அறிக்கை..!
இ-சிகரெட்டுகளின் தீமைகளை உணர்ந்த மத்திய அரசு அதை பயன்படுத்த வேண்டாம் என்று 2018-ஆம் ஆண்டில் அறிவித்தது. 2019-ஆம் ஆண்டில் இ-சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. ஆனால், அதற்கு பல மாதங்கள் முன்பாகவே தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் இ-சிகரெட்டுகள் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இது ஆபத்தானது.
தமிழ்நாட்டின் இளைஞர்களும், மாணவர்களும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் தடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை ஆகும். எனவே, தமிழ்நாட்டில் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு காவல்துறை உடனடியாக முடிவு கட்ட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை மிகவும் ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, E Cigarettes, PMK, Pmk anbumani ramadoss