முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு, முதன்மைத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 57,641 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி மாறி இருந்ததால், காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது.

ஒரு சில மையங்களில் இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற சில மையங்களில் மாறியிருக்கும் பதிவு எண்களைச் சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மையத்திலும் எவ்வளவு நேரம் தாமதம் ஏற்படுகிறதோ தேர்வர்களுக்கு அவ்வளவு நேரம் கூடுதலாக வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் குரூப் 2 தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், ‘தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.

போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை. சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Anbumani ramadoss, Group 2 exam, Group Exams, Pmk anbumani ramadoss, TNPSC