• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன வெள்ளைக்கார துரையா? அன்புமணி கேள்வி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன வெள்ளைக்கார துரையா? அன்புமணி கேள்வி

மிகக்கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் நின்றவாறு முதலமைச்சர், சிலருக்கு மட்டும் நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு திரும்பியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களை சந்திக்க மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன வெள்ளைக்காரத் துரையா? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ``காவிரி பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 2 இடங்களில் மட்டும் நிவாரண உதவி வழங்கிவிட்டு திரும்பியிருக்கிறார்.

    கஜா புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரிவர உணவு வழங்கப்படவில்லை. சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களுக்கு முதல் ஆளாகச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வேண்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

    ஆனால், புயல் தாக்கி 100 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குப்பம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் ஆகிய இடங்களுக்கு சென்ற முதலமைச்சர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மிகக்கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் நின்றவாறு சிலருக்கு மட்டும் நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு திரும்பியுள்ளார்.

    முதலமைச்சர் நிவாரண உதவி வழங்கும் படத்தைப் பார்த்தாலே உண்மை விளங்கும். முதலமைச்சருக்கு அருகில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், அடுத்த வளையத்தில் காவல்துறை உயரதிகாரிகள், மூன்றாவது வளையத்தில் காவல்துறையின் தடுப்புத் தட்டிகள், அதற்குபின் காவலர்கள், முதலமைச்சரிடம் நிவாரண உதவி வாங்குவதற்காக அழைத்து வரப்பட்ட சில மக்கள் தவிர கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்களையே பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் வந்திருப்பதை அறிந்து அவரிடம் மனு கொடுப்பதற்காக வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்பின் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்க்காமல், மழையை காரணம் காட்டி திருச்சி திரும்பிய முதலமைச்சர் அங்கு ஓய்வெடுத்து மகிழ்ந்துள்ளார். மழை குறைந்தபின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க முயலாமல் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

    அதிகாரிகளும், காவலர்களும் புடைசூழ ஆடம்பர காரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதலமைச்சருக்கு சிரமமாக இருந்தால், கொட்டும் மழையில் குடியிருக்க வீடும், உணவும் இல்லாமல், சொந்த ஊர்களிலேயே அகதிகளைப் போலத் தவிக்கும் மக்களின் துயரம் எத்தகையதாக இருக்கும்?

    ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்ட மக்களும் பேரிடரின் கொடுமைகளை அனுபவித்து வரும் நிலையில், மழையில் நனைய மாட்டேன், தரையில் கால் வைக்க மாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி எங்களின் பிரதிநிதியா... அல்லது ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்கு வேலைப் பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட வெள்ளைக்கார துரையா? என்று பாதிக்கப்பட்ட மக்கள் வினவுகின்றனர்.

    கன்னியாகுமரியில் ஒக்கி புயல் தாக்கியபோது அங்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்கள் அனைவரையும் கம்பித் தடுப்புகளுக்குள் சிறை வைத்துவிட்டு 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தான் ஒலிப்பெருக்கி மூலம் குறைகளை கேட்டார். இப்போது மக்களையே சந்திக்காமல் அவர் திரும்பியுள்ளார். இதற்காக அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: