வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் சொல்ல வேண்டும். 1 மாதம் கழிந்தும், அது நடக்கவில்லை என்றால், கருப்பு மையை வைத்து அழியுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி என்ற பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 21ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் வருகிற 28ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. அதன்படி நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “தமிழ் என்ற பெயரை கொண்ட நாட்டில் இருந்து வருகிறேன். நான் பார்க்கும் இடங்களில் வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆனால் நாம் இன்னும் பழம் பெருமைகளை பேசி வருகிறோம். தமிழ் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது. தமிழை. தமிழ் அன்னையை தேடி வருகிறேன். தமிழ் புலவர்கள், சான்றோர்கள் வீட்டில் பதுங்கி இருக்கிறதா? என்று கேட்டால், அங்கும் கலப்பு மொழிதான் பேசுகிறார்கள். பிரான்ஸ் நாட்டில் தேங்க்யூ என்ற வார்த்தையை நீக்கி விட்டு மெர்சி என்று மாற்றி விட்டனர்.
ஆனால் நாம் 100-க்கு 99 வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசி வருகிறோம். தமிழை, தமிழ் அன்னையை தேடி மதுரை வரை செல்கிறேன். அதற்குள் தமிழ் அன்னை இங்கு தான் இருக்கிறார் என்று யாராவது சொன்னால் எனது பிரசார பயணத்தை தள்ளி வைக்கிறேன். தமிழ் அன்னையை பார்க்க ஓடி வருவேன்” என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலவர்கள், அறிஞர்கள் வீடுகளிலும் தமிழை கலப்பு மொழியாக தான் பேசி வருகின்றனர். மேடையில் மட்டும் தமிழ் அன்னை என்று பேசுகிறார்கள். நான் மதுரை வரை தமிழ் அன்னையை தேடி செல்கிறேன். மெல்ல தமிழ் இனி சாகும் என்று திருநீலகண்ட சாஸ்திரி கூறினார். அவர் கூறியது போல் தமிழ் மெல்ல அல்ல, வேகமாக செத்து வருகிறது. தமிழை சாகடித்து கொண்டிருக்கிறோம். இதனால் தமிழ் வேகமாக அழிந்து வருகிறது.
கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தான் தமிழ் பேசுவதில்லை. கலப்பட தமிழ் பேசுகிறோம். ஒன்று செய்யலாம். அதாவது வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் சொல்ல வேண்டும். 1 மாதம் கழிந்தும், அது நடக்கவில்லை என்றால், கருப்பு மையை வைத்து அழியுங்கள்’ என ராமதாஸ் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dr Ramadoss, PMK, Tamil language