துளசி அய்யா வாண்டையார் மறைவு செய்தியறிந்து வேதனையடைந்தேன் - டாக்டர். ராமதாஸ் இரங்கல்

பாமக நிறுவனர் ராமதாஸ்

தமது குடும்பத்தின் செல்வம் ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பூண்டி கிராமத்தில் மிகப்பெரிய கல்லூரியை உருவாக்கி, அரசு உதவியுடன் உயர்கல்வி வழங்கியவர்.

 • Share this:
  சுதந்திர போராட்ட வீரரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார். டெல்டா மாவட்ட மக்களால் கல்விக் கண் திறந்த வள்ளல் என கொண்டாடப்படுபவர். துளசி அய்யா வாண்டையார் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், கல்விக் கொடையாளருமான பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

  Also Read: குழந்தைகளை நோக்கி ஏன் ஏவுகணைகள் அனுப்பி கொலை செய்கிறீர்கள் - உடைந்து அழும் 10 வயது காசா சிறுமி

  தமிழகத்தின் பெருநிலக்கிழார்களில் ஒருவர். தமது குடும்பத்தின் செல்வம் ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பூண்டி கிராமத்தில் மிகப்பெரிய கல்லூரியை உருவாக்கி, அரசு உதவியுடன் உயர்கல்வி வழங்கியவர். காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து கிராமங்களிலிருந்தும் பூண்டி கல்லூரியில் படிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவரது கல்லூரியில் படித்தவர்கள் உலகின் பல நாடுகளில் நல்ல வேலைகளில் உள்ளனர். கல்வி மட்டுமே மக்களை உயர்த்தும் என்பதை உணர்ந்து, அதை செயல்படுத்திக் காட்டியவர் அவர்.

  இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் காமராசர், இராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். பூண்டி பகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவியர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக்  கூறியுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: