Home /News /tamil-nadu /

முகநூல் பதிவுக்காக பாமக தொண்டர் கைது... போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் எச்சரிக்கை

முகநூல் பதிவுக்காக பாமக தொண்டர் கைது... போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் எச்சரிக்கை

ராமதாஸ்

ராமதாஸ்

சட்டப்படி செயல்படும் காவல்துறை இத்தகைய செயல்களில் ஈடுபடாது; சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் தான் இத்தகைய செயல்களை செய்யும் - ராமதாஸ்

    பாட்டாளிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடலூர் மாவட்டத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    "சமூக விரோதிகளை ஒடுக்கி வைத்து, சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியதுதான் காவல்துறையின் முதன்மை கடமை ஆகும். ஆனால், கடலூர் மாவட்ட காவல்துறை சமூக விரோதிகளுக்கு துணையாக நின்று, அப்பாவி பாட்டாளிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

    கடலூர் மாவட்டம் பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். வாழ்வாதாரத்திற்காக திருப்பூரில் பணி செய்து வருகிறார். முந்தைய அதிமுக ஆட்சியின்போது ராஜேஷ் முகநூலில் அரசியல் நிகழ்வு குறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை; அதில் அவதூறும் இல்லை. இது தொடர்பாக அவர் மீது சிலர் அளித்த புகார் குறித்து முந்தைய ஆட்சியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ராஜேஷின் பதிவில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லை என்று கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அதே பதிவுக்காக கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல்துறையினர் 400 கி.மீ பயணம் செய்து திருப்பூரிலிருந்து ராஜேஷை சட்டவிரோதமாக கைது செய்து வந்து கடலூரில் சிறையில் அடைத்துள்ளனர்.

    ராஜேஷ் மீது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவருக்கு அதிகபட்சமாக ஓரிரு மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்க முடியும். 7 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை வழங்கக்கூடிய வழக்குகளில் எவரையும் கைது செய்யக்கூடாது என்று சில நாட்களுக்கு முன்பு தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதையும் மீறி யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த அத்துமீறலை கடலூர் காவல்துறை செய்திருக்கிறது?

    ராஜேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களும் மீறப்பட்டிருக்கின்றன. ஒருவரை கைது செய்வதற்கு முன் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டும்; காவல்துறையினர் சீருடையில் சென்று தான் கைது செய்ய வேண்டும்; கைது குறித்து சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், இதில் எந்த நடைமுறையையும் கடலூர் மாவட்ட காவல்துறை பின்பற்றவில்லை.

    புதுச்சத்திரத்தில் இருந்து வெள்ளை நிற ஸ்விப்ட் டிசையர் காரில், சாதாரண உடையில் திருப்பூர் சென்ற காவலர்கள், ராஜேசின் வீட்டுக்கு சென்று ஏதோ முகவரி கேட்டுள்ளனர். அதற்காக அவரை வெளியில் அழைத்து வந்த காவலர்கள், காரில் கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளனர். அதன்பிறகு தான் அவரை கைது செய்வதாக கூறியுள்ளனர். பிடி ஆணை, முதல் தகவல் அறிக்கை உள்ளதா என்று கேட்டதற்கு எதுவுமே இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். வீட்டில் கருவுற்ற மனைவி தனியாக இருக்கிறார், அவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய போதிலும் கூட, அதை அனுமதிக்காமல் அவரது செல்பேசியை காவலர்கள் பிடுங்கி வைத்துக் கொண்டனர். சட்டப்படி செயல்படும் காவல்துறை இத்தகைய செயல்களில் ஈடுபடாது; சட்டவிரோத கடத்தல் கும்பல்கள் தான் இத்தகைய செயல்களை செய்யும்.

    ராஜேஷ் தனியார் வாகனத்தில் சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட தகவல் பரவியதும், அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை பாட்டாளி மக்கள் கட்சியினர் தேடத் தொடங்கினார்கள். வாழப்பாடி அருகில் அந்த மகிழுந்தை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தி விசாரித்தபோது தான், ராஜேஷை அழைத்துச் சென்றவர்கள் புதுச்சத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான காவலர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் பிடி ஆணை உள்ளதா என்று கேட்டபோது எதுவுமே இல்லை என்று கூறியுள்ளனர். அதன்பின்னர் அவரை புதுச்சத்திரத்திற்கு அழைத்து வந்து காவலில் அடைத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க : சிவகங்கை சிறுவனின் அதீத நினைவாற்றல் - சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தல்

    ஒரு சாதாரண முகநூல் பதிவுக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர் ஒருவரை கைது செய்வதற்காக இவ்வளவு தூரம் பாடுபடும் கடலூர் மாவட்ட காவல்துறை மாவட்டம் முழுவதும் தங்கு தடையின்றி நடைபெறும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியினரை பழிவாங்கும் நோக்குடன் ராஜேஷை கைது செய்யும் படலம் அரங்கேறியுள்ளது. இது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    இதையும் படிங்க : போலீஸ்காரரின் எலும்புகளை உடைத்த Swiggy டெலிவரி பாய் - சென்னையில் பரபரப்பு சம்பவம்

    சட்டம் - ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்தி ஓர் ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கித் தருவதும் காவல்துறை தான்; மனித உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டு அரசுக்கு அவப்பெயரை தேடித் தருவதும் காவல்துறை தான். தமிழ்நாட்டில் காவல்துறைக்கு நல்ல முதலமைச்சர் இருக்கிறார்; காவல்துறைக்கு நல்ல தலைமை இயக்குனர் இருக்கிறார். ஆனால், ஒரு சில தவறான அதிகாரிகளின் செயல்பாடுகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக் கூடாது. இது போன்ற அத்துமீறல்களை முதல்வர் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

    இதையும் படிங்க : ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடுங்கள் - தமிழக டிஜிபி-க்கு நீதிமன்றம் உத்தரவு!

    கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சமூக ஊடகப் பேரவை பொறுப்பாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டதில் நடந்த அத்துமீறல்கள் குறித்தும், தொடர்ந்து பா.ம.க.வினருக்கு எதிராகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறித்தும் விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும். தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்டாளிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடலூர் மாவட்டத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்"

    இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Dr Ramadoss

    அடுத்த செய்தி