PMK Manifesto: ஒரு கோடி பேருக்கு வேலை, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் - பல்வேறு திட்டங்களுடன் பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியீடு

PMK Manifesto: ஒரு கோடி பேருக்கு வேலை, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் - பல்வேறு திட்டங்களுடன் பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக தேர்தல் அறிக்கை

அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் பா.ம.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளநிலையில் பா.ம.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பா.ம.க தேர்தல் அறிக்கையில், ‘மழலையர் வகுப்பு முதல் - 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பும், கல்வித் தரத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்கவேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு கல்வி வழங்குவதற்கான அரசின் செலவு இப்போதுள்ள 32,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாபாய உயர்த்தப்படும்.

    பள்ளிக் கல்விக்கான ஆண்டு ஒதுக்கீட்டை 80,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இடைநிற்றலைத் தடுக்க 10-ம் வகுப்பு மாணவருக்கு மாதம் 500 ரூபாயும், 12-ம் வகுப்பு மாணவருக்கு 1,000 ரூபாயும் வழங்கப்படும். 2021- 2022-ம் ஆண்டு முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடன்தொகையை தமிழக அரசே வங்கிகளுக்கு செலுத்தும்.


    தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். கடலூர், ஈரோடு மாவட்டங்களில் 2-வது அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். சென்னையில் 1,000 கோடி ரூபாய் செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும். வேளாண் துறைக்கு தனிநிதிநிலை அறிக்கை, உழவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயும் முதல் 30,000 ரூபாய் வரையில் இடுபொருள் மானியம் 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் ஓய்வூதியம், பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடனில் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி, தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க கட்டாயமாக்கப்படும். தனியார்நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2-வது தலைநகராக திருச்சியும், 3-வது தலைநகராக மதுரையும் அறிவிக்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: