பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 56 சமூகத்திற்கும் வாரியங்கள் அமைப்பு - ஆந்திர முதலமைச்சர் ஜெகனுக்கு ராமதாஸ் பாராட்டு

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 56 சமூகத்திற்கும் வாரியங்கள் அமைப்பு - ஆந்திர முதலமைச்சர் ஜெகனுக்கு ராமதாஸ் பாராட்டு

ராமதாஸ், ஜெகன்மோகன் ரெட்டி

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 56 சமூகத்திற்கும் வாரியங்கள் அமைத்ததற்கு பாராட்டு தெரிவித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் ரெட்டியை ஆந்திரத்தின் ’சமூகநீதிக் காவலர்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ”ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 56 சமூகங்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியம் அமைத்திருப்பதுடன், அவற்றில் 50%-க்கும் கூடுதலான வாரியங்களின் தலைவர்களாக பெண்களை நியமித்திருக்கிறீர்கள். இது சமூகநீதியையும், சமூக முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தங்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

    Also read: இந்தி தெரியாவிட்டால் அரசு வேலை கிடையாதா? - மத்திய அரசின் அறிவிப்பிற்கு வைகோ கடும் கண்டனம்

    முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் சாதிகளை பிற்போக்கின் அடையாளமாக பார்க்கும் போலி நாகரிக கலாச்சாரம் பெருகி வரும் சூழலில், சாதிகளை சமூகநீதியின் அடித்தளமாகவும், மாநில வளர்ச்சிக்கான அலகாகவும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இதுதான் உண்மையான புரட்சியாகும். இதன் மூலம் நீங்கள் ஆந்திராவின் சமூகநீதிக் காவலராக உயர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ‘ஆந்திராவின் சமூகநீதிக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் கூறுகையில், ”56 வாரியங்கள் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் அந்த சமுதாய மக்களின் நலனுக்காக ரூ.75,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அந்த வகையில் இது சமூக நல நடவடிக்கை மட்டுமின்றி, பொருளாதார நல நடவடிக்கையுமாகும்.



    சமூகம் சார்ந்த வாரியங்கள் மூலம் அரசின் நலத்திட்டங்கள் அந்தந்த சமூகங்களுக்கு வழங்கப்படும்; நியாயவிலைக் கடை பொருட்கள், முதியோர் ஓய்வூதியம், பள்ளிகளுக்கு செலுத்தப்படும் கல்விக் கட்டணத்தை திருப்பி அளித்தல் ஆகியவை இந்த வாரியங்கள் மூலம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்த சமுதாயங்கள் வறுமை இல்லாத சமுதாயங்களாகவும், கடன் இல்லாத சமுதாயங்களாகவும் மாறும்.

    பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 45 முதல் 60 வயது வரையிலான பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.18,750 கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் தற்சார்பு நிலையை அடையவும், குடும்பங்கள் பொருளாதார வளர்ச்சி அடையவும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட தனி நபர்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் வழி வகுக்காது. ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது மாநிலத்தின் வளர்ச்சியாக மாறும் என்பது உறுதி.

    ஆந்திரத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து, இதுவரை 40 விழுக்காடு மதுக்கடைகளை மூடியிருப்பதும் பாராட்டத்தக்கதாகும். இதுவும் சமூக முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Rizwan
    First published: