• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'ஒவ்வொரு சமுதாயத்துக்குமான மேம்பாட்டு இலக்குகளை உருவாக்கி செயல்படுத்துக' - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

'ஒவ்வொரு சமுதாயத்துக்குமான மேம்பாட்டு இலக்குகளை உருவாக்கி செயல்படுத்துக' - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஒவ்வொரு சமுதாயத்துக்குமான மேம்பாட்டு இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    இன்று பாமகவின் புத்தாண்டு பொதுக்குழுக் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசியதாவது, "ஒவ்வொரு சமுதாயமும் உரிய முன்னேற்றம் அடைந்தால்தான் தமிழ்நாடு முன்னேற்றமடைய முடியும். எனவே, ஒவ்வொரு சமுதாயத்திற்குமான மேம்பாட்டு இலக்குகளை (Agenda for Development) உருவாக்க வேண்டும். ஐநா நீடித்த மேம்பாட்டு இலக்குகளுக்கு (Sustainable Development Goals - SDGs) ஏற்ப கல்வி, வேலை, தொழில், உடல்நலம் என ஒவ்வொன்றிலும் -தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமுதாயமும் மேம்பட்ட நிலையை அடைவதற்கான இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை எட்டுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியா என்பது நாடும் அதன் மக்களும் ஆகும். நாடு என்பது அதன் எல்லையால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கான வரையறை என்ன என்பதை அளவிட, இந்திய அரசின் மானுடவியல் அமைப்பு (Anthropological Survey of India - ASI) ஒரு மாபெரும் ஆய்வினை 1985ஆம் ஆண்டில் தொடங்கி 15 ஆண்டுகள் நடத்தியது. இந்திய மக்கள் திட்டம் (People of India Project) என்ற அந்த ஆய்வின் முடிவில் 4,694 சமுதாயங்கள் தான் "இந்தியா" என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் மொத்தம் 40,000 பக்கங்கள் அடங்கிய 43 தொகுப்புகளாக வெளியிடப்பட்டன.

    இந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டினை 7 சூழல்- பண்பாட்டு மண்டலங்களாக (Eco-cultural zones) பிரித்து, அவற்றில் மொத்தம் 364 சமுதாயங்கள் (Communities) வாழ்வதாக அடையாளம் காணப்பட்டது. இந்திய அளவில், ஒருங்கிணைந்த தெலுங்கானா - ஆந்திர பிரதேசத்துக்கு அடுத்ததாக மிக அதிக எண்ணிக்கையில் சமுதாயங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    Also read: சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் வேலை இழப்பைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்க - வைகோ

    இந்திய மானுடவியல் அமைப்பின் இந்திய மக்கள் திட்டம் ஆய்வு, ‘தேன்கூடு மாதிரி’ (Honey - Comb Model) எனும் கோட்பாட்டை முன்வைக்கிறது. தேன்கூட்டில் ஒவ்வொரு அறையும் தனியாக இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் ஒற்றுமையாக இருக்கின்றன. அனைத்து அறைகளும் சேர்ந்து ஒரு முழுமையான தேன்கூட்டை உருவாக்குகின்றன. அதேபோன்று சமுதாயங்கள் இணைந்து ஒரு நாட்டை உருவாக்குகின்றன.

    தமிழ்நாடு என்பது அதன் எல்லையை குறிக்கும். தமிழ்நாட்டு மக்கள் என்பது அதன் 364 சமுதாயங்களை குறிக்கும். இதுதான் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் உண்மையான மேம்பாடும் அமைதியும் - இந்த சமுதாயங்கள் அனைத்தும் முன்னேற்றம் அடைவதிலும், அவற்றுக்கான உரிமைகளை பெறுவதிலும், அவற்றின் பண்பாட்டை காப்பதிலும், அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதிலும் தான் இருக்கிறது.

    ஒவ்வொரு சமுதாயமும் வளர வேண்டும். எல்லா சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இதுவே வளமான, வலிமையான, அமைதியான தமிழ்நாட்டை உருவாக்கும். எனவே, ஒவ்வொரு சமுதாயத்துக்குமான மேம்பாட்டு இலக்குகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு சமுதாயத்துக்குமான வரைவு மேம்பாட்டு இலக்குகளை அந்தந்த சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்து உருவாக்குவது என்றும், அதை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த சில வாரங்களில் வெளியிடுவது என்றும் இந்த சிறப்பு பொதுக்குழு தீர்மானிக்கிறது."

    இவ்வாறு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: