• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • போங்கடா போக்கத்த பசங்களா.. நாங்க ஒரே குடும்பம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் நெகிழ்ச்சி பதிவு

போங்கடா போக்கத்த பசங்களா.. நாங்க ஒரே குடும்பம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் நெகிழ்ச்சி பதிவு

 ராமதாஸ்

ராமதாஸ்

முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்..அடுத்து உங்கள் தொழிலைப் பாருங்கள்.. அதன்பின் கட்சிப் பணிகளை கவனியுங்கள்

 • Share this:
  விசுவாசம் என்பதன் அர்த்தம் பாட்டாளிகளின் ரத்தத்திலும், மனதிலும் எழுதப்பட்டிருக்கிறது. கொள்கை இல்லாத கூட்டங்களை அவர்கள் கால் தூசுக்குக் கூட மதிக்கமாட்டார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார்.

  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மயிர் நீப்பின் வாழாக் கவரிமா’’ என்பது கவரிமான்களுக்கு மட்டும் பொருந்தாது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் பொருந்தும். ஒவ்வொரு பாட்டாளியும் கவரிமான் தான்.பாட்டாளிகள் அனைவரும் சத்திரியர்கள். அவர்களுக்கு கொள்கை தான் முக்கியம். அவர்களுக்கு விலையாக கோடிகள் கொட்டப்பட்டால் கூட, அதை இடது கையால் வீசி எறிவார்கள். அவ்வாறு வழங்கப்படும் கோடிகளை விட, தங்களின் இறப்புப் பிறகு தங்கள் மீது போர்த்தப்படும் பா.ம.க கொடி தான் தங்களுக்கு பெரிது என்று நினைக்கக்கூடியவர்கள் பாட்டாளிகள். இது பாட்டாளிகளை மயக்கும் வார்த்தைகளாலும், பளபளக்கும் பொய்களாலும் வளைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் பொய்யர்களுக்கும், பிள்ளை பிடிக்கும் கூட்டத்திற்கும் தெரியாது.

  பாட்டாளிகள் அனைவரும் என்னால் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்தக் காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தியாகங்களை செய்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவர்கள் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் என்பதைத் தவிர வேறு எந்த பதவியும் கிடைக்கவில்லை. பயனும் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர்கள் கவலைப்படவில்லை. காரணம் அவர்களுக்குத் தேவை பதவிகள் அல்ல முதன்மைப் பாட்டாளியான அய்யாவின் பாசம் தான்.

  Also Read: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பலர் அரசு பதவிகளை அனுபவித்திருக்கிறார்கள். இப்போதும் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பதவிகள் கூட அவர்கள் கேட்டுப் பெற்றதல்ல. அவர்களை கட்சியின் தலைமையே தேடிச் சென்று கொடுத்ததாகும். இது தான் பா.ம.க. தமிழ்நாட்டின் மற்ற கட்சிகளில் எல்லாம் கட்சிப் பணி தான் முதன்மையாக இருக்கும். குடும்பத்தைக் கூட கவனிக்காமல் கட்சிப் பணியை கவனிக்க கட்டாயப்படுத்தப்படுவர் தொண்டர்கள். அதன் பயனை அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பார்கள். ஆனால், பா.ம.க.வில் அப்படிப்பட்ட நிலை இல்லை.

  ‘‘ முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்..அடுத்து உங்கள் தொழிலைப் பாருங்கள்.. அதன்பின் கட்சிப் பணிகளை கவனியுங்கள்’’ என்பது தான் பாட்டாளிகளுக்கு நான் நடத்தியுள்ள பாடம். பாட்டாளிகளுக்கு தனி மனித ஒழுக்கம், பண்பாடு, குடும்ப உறவு முறை உள்ளிட்ட அனைத்தையும் நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ‘‘படிக்கும் வயதில் இருப்பவர்கள் நன்றாக படியுங்கள்... மூத்தவர்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள்’’ என்பதைத் தான் தொடக்கம் முதலே கூறி வந்திருக்கிறேன். அவர்கள் படிப்பதற்காகத் தான் 32 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.சி 20% இட ஒதுக்கீட்டையும், இப்போது 10.50% தனி இட ஒதுக்கீட்டையும் வென்றெடுத்துக் கொடுத்திருக்கிறேன்.

  Also Read: என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும் - பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்

  பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் என்னைப் பார்த்தால் அவர்களின் கவலைகள் அனைத்தும் பறந்து விடும். அவர்களைப் பார்த்தால் எனது வருத்தங்கள் அனைத்தும் விலகி மனதில் மகிழ்ச்சி குடி புகுந்து விடும். காரணம் பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஒரு கட்சியல்ல. அது ஒரு குடும்பம். இந்த பந்தம் இன்று நேற்றல்ல.42 ஆண்டுகளாக நீடிக்கும் உறவு. இது என்றும் தொடரும் சொந்தம்.

  விசுவாசம் என்பதன் அர்த்தம் பாட்டாளிகளின் ரத்தத்திலும், மனதிலும் எழுதப்பட்டிருக்கிறது. கொள்கை இல்லாத கூட்டங்களை அவர்கள் கால் தூசுக்குக் கூட மதிக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட பாட்டாளிகளை பறித்து விடலாம்  தங்கள் முகாமுக்குக் கடத்திச் சென்று விடலாம் என்று பொய்யுரைப்பதையே பிழைப்பாகக் கொண்ட கூட்டம் நினைத்தால் அவர்களுக்கு ஆறாவது அறிவு வளரவில்லை என்று தான் அர்த்தம். அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு பாட்டாளியும் அளிக்கும் பதில்....‘‘ போங்கடா. போக்கத்தப் பசங்களா?’’ என்பது தான்’ எனக் கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: