தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்தும் கூற்றை கொண்டு இருக்கின்றது எனவும், காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தி இருக்கின்றனர் எனவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. தாராபுரம் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் உட்பட தே.ஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரதமரின் உரையை கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் மொழி பெயர்த்தார்.
பொதுக்கூட்டத்தில் வெற்றி வேல், வீர வேல் என கூறி பேச்சை பிரதமர் மோடி துவங்கினார். “தே.ஜ.கூட்டணி ஒரு புறம் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைக்கின்றது. மறுபுறும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி குடும்ப வளர்ச்சிகான திட்டத்தை முன் வைக்கின்றது. அடுத்தவர்களை அவமானபடுத்துகின்ற, பொய் சொல்கின்ற பணிகளை காங்கிரஸ், தி.மு.க கூட்டணி செய்கின்றது.
2் ஜி ஏவுகணை தமிழகத்தின் பெண்களை இழிவுபடுத்தும் வேலையை செய்கின்றது. காங்கிரஸ் தி.மு.கவினர், தங்கள் தலைவர்களை கட்டுப்படுத்தவேண்டும். காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் தமிழக முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தி இருக்கின்றனர். தி.மு.க காங்கிரஸ் கட்சிகளின் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்தும் கூற்றைக் கொண்டு இருக்கின்றது. சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் லியோனி பெண்களை இழிவுபடுத்தி பேசினார். தி.மு.கவின் இளவரசர் பெண்களை இழிவுபடுத்தி வருகின்றார்.
இவர்களை அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி தலைமை கட்டுப்படுத்துவதில்லை. தி.மு.க தலைவர்கள் ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் நடத்திய விதத்தை நினைவு கூர்ந்து பாருங்கள். பெண்களின் வளர்ச்சிக்கு தி.மு.க காங்கிரஸ் தலைவர்கள் உறுதுணையாக இருந்தது இல்லை என தெரிவித்தார்.
இதேபோல அவர்கள் கூட்டணியில் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார் என கூறிய பிரதமர் மோடி, பெண்களை அவமானபடுத்தும் எண்ணம் கொண்டவர்கள் அந்த கூட்டணியினர் எனவும் தெரிவித்தார். இவர்களின் நட்பு என்பது எப்போதும் பெண்களுக்கு எதிராகவே இருக்கின்றது என கூறிய பிரதமர், தே.ஜ.கூட்டணியின் அங்கமாக இருக்கும் நாங்கள் ஆண்டாள் , அவ்வையாரின் லட்சியத்தால் உத்வேகம் அடைந்து இருக்கிறோம் எனவும், பெண்கள் சக்தியை மேம்படுத்தும் விதமாக திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது எனவும், திட்டங்களை பெண்கள் பெயரில் இருக்கும் படி வடிவமைக்கின்றோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
முன்னதாக பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருந்த போது அருகில் அமர்ந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி அழைத்தார். உடனே நாற்காலியை தூக்கி பிரதமர் அருகில் போட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் சொல்வதை கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் கையோடு கொண்டு வந்திருந்த பைலில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நீட்ட, அதை பிரித்து கூட பார்க்காமல் தனது சட்டை பாக்கெட்டில் அந்த கடிதத்தை பிரதமர் மோடி மடித்து வைத்துக்கொண்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Annamalai, BJP, Dharapuram Constituency, DMK, Edappadi Palanisami, L Murugan, Modi, O Panneerselvam, TN Assembly Election 2021, Vanathi srinivasan