Home /News /tamil-nadu /

பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது.. திருமாவளவன் கண்டனம்!!

பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது.. திருமாவளவன் கண்டனம்!!

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

pegasus | உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது.

    பெகாசஸ் விவகாரத்தில் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    இஸ்ரேல் நாட்டின் NSO நிறுவனத்திடமிருந்து பெகாசஸ் உளவு கருவியை வாங்கி அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை மத்திய அரசு கண்காணித்ததாக கடந்த ஆண்டு சர்ச்சை வெடித்தது. இது தொடர்பான வழக்கில், 3 நபர் சுதந்திரமான நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் நவீன ஏவுகணைகளுடன் பெகாசஸ் உளவு கருவியையும் இஸ்ரேலிடமிருந்து மத்திய அரசு வாங்கியதாக NEW YORK TIMES பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "உலகின் மிக சக்தி வாய்ந்த இணைய கருவிக்கான போர்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், 2017- ஆம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு மேற்கொண்ட பயணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி மட்டுமே. பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, 2017- ஆம் ஆண்டு வரை எந்த இந்திய பிரதமரும் இஸ்ரேல் சென்றதில்லை. மோடியின் அந்த பயணத்தின் போது 14 ஆயிரம் கோடி மதிப்பிலான நவீன ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏவுகணைகளுடன் பெகாசஸ் கருவியையும் இந்தியா பெற்றதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    Also read: தேசத்திற்கே துரோகம் செய்த மோடி அரசு.. பெகாசஸ் விவகாரத்தில் ராகுல் காந்தி சாடல்!!

    2019- ஆம் ஆண்டில், பாலஸ்தீனத்தின் மனித உரிமை அமைப்புக்கு கண்காணிப்பு அந்தஸ்தை அளிக்க, ஐ..நா.வில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. 2019- ஆம் ஆண்டில் தான், பெகாசஸ் உளவு கருவி மூலம் சிலர் கண்காணிக்கப்படுவதாக தகவல்களும் வெளியாகின. எனினும் இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி, குற்றச்சாட்டுக்களை மத்திய அரசு மறுத்து வந்தது. இந்நிலையில் பெகாசஸ் சர்ச்சை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.

    இச்சர்ச்சைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை 'நியூ யார்க் டைம்ஸ்' நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    அந்நிய நாட்டு உளவுச் செயலியை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது மட்டுமின்றி அதை மூடிமறைத்து நாடாளுமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்றியது சட்டவிரோதம் மட்டுமல்ல, தேச துரோகமும் ஆகும். இந்தக் குற்றத்தைச் செய்த ஒருவர் பிரதமர் பதவியில் நீடிப்பது இந்த நாட்டுக்கே அவமானம் ஆகும். எனவே நரேந்திர மோடி உடனடியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    மேலும் படிக்க ..  இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு

    தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றிப் பல மாதங்கள் ஆன பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும்; பெகாசஸ் மூலம் மோடி அரசு செய்துள்ள தேசத் துரோகத்தைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் ஜனவரி 31 அன்று நிகழ்த்தப்பட உள்ள குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Thirumavalavan

    அடுத்த செய்தி