வீட்டுவசதித் திட்டம் மூலம் கட்டப்பட்ட 1,152 இலகுரக வீடுகளை பிரதமர்
மோடி திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து, பயனாளிகளுக்கு வீட்டு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வந்தார். அங்கு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.
தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கிவைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. சமூகநீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது தமிழ்நாடு வளர்ச்சி. அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சி என குறிப்பிடுகிறோம்.
ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6% ஆகும். ஆனால் ஒன்றிய அரசின் வருவாயில் தமிழ்நாட்டுக்கு 1.21% மட்டுமே. பயனாளிகள் செலுத்தமுடியாத தொகையை மாநில அரசே செலுத்தவேண்டிய நிலை உள்ளது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி ஆகும் என்றார்.
மேலும், கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட வேண்டும். ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை குறைந்தது மேலும் 2 ஆண்டு காலத்துக்கு நீட்டிக்க வேண்டும். தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்து தனது உரையை முடித்தார்.
இதைத்தொடர்ந்து, ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். அப்போது, வீட்டுவசதித் திட்டம் மூலம் கட்டப்பட்ட 1,152 இலகுரக வீடுகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து, பயனாளிகளுக்கு வீட்டு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.
அப்போது, பயணாளிகள் சிலருக்கு பிரதமர் மோடி, வீடுகளுக்கான சாவியை கொடுத்தார். அந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் விலகி நின்றார். எனினும், விலகி நின்ற முதல்வர் ஸ்டாலின் கையைப் பிடித்து, அழைத்து பயணாளிகளுக்கு சாவி கொடுக்க வைத்தார் பிரதமர் மோடி.
மேடையில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளித்து பிரதமர் அவர் கையை பிடித்து அழைத்து சாவியை கொடுக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.