12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்பட்டு, அனைத்து தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Share this:
    மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை உச்ச நீதிமன்றமும் வரவேற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்த பெரும் விவாதம் எழுந்தது. தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள், சட்டமன்ற பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்பட்டு, அனைத்து தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் முதல்வரிடம் அளிக்கப்பட்டது. அதன், அடிப்படையில் முதலமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

    இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.

    பெருந்தொற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் “நீட்’’ போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. இது குறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: