தொலைக்காட்சி சீரியல்களால் பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் அழிந்து வருவதாக நாடகக்கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கல்யாண முருங்கை மரத்தின் கட்டைகளில் உருவங்கள் செதுக்கப்பட்டு பொம்மையாக்கி, வண்ணமயமாய் ஆடை கட்டி, திரைக்கு பின்னால் இருந்து நூலால் பொம்மைகளை இயக்கி, கதை சொல்வது தான் பொம்மலாட்டம். இப்படி சொன்னால்தான் பொம்மலாட்டம் என்றால் என்னவென்று பலருக்கு புரியும். காரணம், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தை இன்றைய நாட்களில் காண்பது அரிதினும் அரிதாகி விட்டது.
சென்னை பெசண்ட் நகரில் நேற்று பாஞ்சாலங்குறிச்சி என்ற தலைப்பில் பொம்மலாட்டம் நடைபெற்றது. சுமார் 50 பேர் மட்டுமே இதைப் பார்க்க வந்திருந்தனர்.
உள்ளே சென்று பொம்மலாட்டக் கலைஞர்களிடம் கேட்டால் அவர்களின் வாழ்வாதாரம் ஊசலாட்டம் ஆடுவதை புரிந்து கொள்ள முடிந்தது. பலதலைமுறைகளாக இதையே குடும்பத்தொழிலாக செய்துவரும் இவர்களுக்கு இப்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு கூட வழியில்லை. ஊருக்கு கதை சொல்லும் இவர்களின் கண்ணீர்க்கதை அந்த பொம்மைகளுக்கே அதிகம் தெரியும்.
நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் பொம்மலாட்டத்தை பார்க்க முடியவில்லை. பொம்மைகளை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக சுற்றிவரும் இவர்களுக்கு எங்குமே வரவேற்பில்லை என்கின்றனர். நாகரிக வளர்ச்சியில் தொழில்நுட்ப போட்டியில் எத்தனை வளர்ச்சிகள் வந்தாலும் தொலைக்காட்சி சீரியல்கள் தான் பொம்மலாட்டம் போன்ற கலைகள் அழிவதற்கு முக்கிய காரணம் என்கிறார் நாடக ஆசிரியர் ஜம்புநாதன்.
காலமாற்றத்திற்கேற்ப பொம்மலாட்ட வடிவத்தை மாற்றாமல் கதைகளில் மாற்றம் கொண்டு வந்தால் பொம்மல்லாட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்கிறார் எழுத்தாளர் பாரவி.
கார்ட்டூன் சேனல்களில் அனிமேஷன்,கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். அதிலாவது பொம்மலாட்டத்தையும் சேர்க்க வேண்டுமென்பது இவர்களது எதிர்பார்ப்பு. இது சாத்தியாமானால் குழந்தைகளின் கற்பனைத்திறன் வளர்வதோடு கலையும், கலைஞர்களும் வளரவும், வாழவும் வழிபிறக்கும்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.