தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் தடை அரசாணையைச் செயல்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாடு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகிய துறைகளுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு 2018ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த தடையானது 2019 ஜனவரி 1ம் தேதியிலிருந்து அமலில் உள்ளது.
தீர்ப்பாயத்தில் வழக்கு
ஆண்டனி ரூபின் கிளமெண்ட் என்ற விலங்குகள் நல ஆர்வலர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் என்று பாலிபுரோப்பிலீன் கொண்ட மக்காத பிளாஸ்டிக் பைகளை பல நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாகவும், இப்படி உற்பத்தி செய்யும் பைகளை வாங்கி சிபெட் நிறுவனத்தில் கொடுத்து சோதித்ததில் அப்பைகள் மக்காதத் தன்மையுடையதாக இருப்பதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, 2018-ம் ஆண்டு பிளாஸ்டிக் தடை அரசாணையின்படி, மக்காத ப்ளாஸ்டிக் பைகளை தொடர்ந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும், வேதியியல் பொறியாளர்கள், நிபுணர்கள் கொண்ட குழுவை உருவாக்கி இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படாமல் தடுக்கவும் அரசிற்கு உத்தரவிட கோரப்பட்டது.
Also see:
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப்ரவீன் ரத்தினம் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் பைகளை உண்ணும் கால்நடைகளும், நுண் பிளாஸ்டிக் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்படைவதால் அரசுத் துறைகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனைக் கேட்ட தென்மண்டல தேசிய பசுமைத் தீர்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.
இதுவரை மக்காத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தவறிழைத்தவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு? அரசாணையைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பன, குறித்து விரிவான அறிக்கையை இரண்டு மாதங்ககுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும் அவர்கள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.