நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்! இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்! இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்

நீட் விவகாரம்

தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் சேலம் நீதிமன்றத்தில் சரணடந்தார். இதனிடையே மற்றொரு மாணவர் உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே பொறுப்பு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர்கள் உதித் சூர்யா, ராகுல், பிரவீன் ஆகியோரும், அவர்களது தந்தைகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் மீதும் ஆள்மாறாட்டப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் தலைமறைவானார்.

அவர் மொரீஷியசுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது தந்தை ஷஃபி கடந்த ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடியில் கைது செய்யப்பட்டார். அவரைத் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து, விசாரித்து வரும் நிலையில், மாணவர் இர்ஃபான், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த சிபிசிஐடி போலீசார், இர்ஃபானிடம் விசாரணை நடத்த முயன்றபோது, வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இர்ஃபானை அக்டோபர் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இர்ஃபானின் வழக்கறிஞர்கள், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இர்ஃபான் சேரவில்லை என விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவர் இர்ஃபான் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவின் செயலுக்கு அவரது தந்தையே பொறுப்பு என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியது. மேலும், உதித் சூர்யாவின் முன் ஜாமின் மனுவை, ஜாமின் மனுவாக விசாரிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்றுக் கொண்டது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்தநிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் வேலூர் திருப்பத்தூரை சேர்ந்த இடைத்தரகர் கோவிந்தராஜை பிடித்து தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Also see:

Published by:Karthick S
First published: