4 கோடி லிட்டர் தண்ணீர்; 65 கோடி ரூபாய் நிதி! ஜோலார்பேட்டை தண்ணீர் எக்ஸ்பிரஸ் முழு விவரம்

இந்த திட்டத்திற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், நடை ஒன்றுக்கு 8 லட்சத்து 60 ஆயிரம் வீதம், தெற்கு ரயில்வேக்கு 13 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

4 கோடி லிட்டர் தண்ணீர்; 65 கோடி ரூபாய் நிதி! ஜோலார்பேட்டை தண்ணீர் எக்ஸ்பிரஸ் முழு விவரம்
புறப்பட்டது தண்ணீர் எக்ஸ்பிரஸ்!
  • News18
  • Last Updated: October 9, 2019, 11:08 AM IST
  • Share this:
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் சேவை திட்டம் நேற்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இழந்ததும், பெற்றதும் என்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, தினமும் ஒரு கோடி லிட்டர் என்ற இலக்குடன் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி இந்த சேவை தொடங்கியது. ஆனால், நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டு வர முடிந்ததால், தினமும் 25 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கொண்டு வரப்பட்டது. பின்னர் ஜூலை 13-ம் தேதி முதல் கூடுதலாக மற்றொரு ரயில் இயக்கப்பட்டு, தினமும் 55 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் சேவை, இன்றோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 159 நடைகள் மூலம், 4 கோடியே 37 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. நிர்ணயித்தபடி தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வந்திருந்தால், 89 கோடி லிட்டர் தண்ணீர் கிடைத்திருக்கும். இந்த திட்டத்திற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், நடை ஒன்றுக்கு 8 லட்சத்து 60 ஆயிரம் வீதம், தெற்கு ரயில்வேக்கு 13 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


சென்னையில் அண்மையில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதும், சில நாட்களில் கிருஷ்ணா நீர் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பதாலும் இந்த திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் மொத்த தண்ணீர் தேவையில் இந்த திட்டத்தின் மூலம் கிடைத்தது மிக மிக குறைந்த அளவே என்றாலும், தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில்கொண்டு சென்னை மக்கள் இந்த திட்டத்தை வரவேற்றனர். அதேசமயம், நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்தி, நீர்நிலைகளை முறையாக தூர்வாரினால் இவ்வளவு செலவு ஏற்பட்டிருக்காது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Also see:
First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்