• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு

9 மாவட்டங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் உள்ளிட்டவை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

  • Share this:
    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக கடந்த புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 77.43 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஆயிரத்து 324 கிராம ஊராட்சித் தலைவர், 10 ஆயிரத்து 329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இதேபோல, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாலை 5 மணிமுதல் 6 மணிவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதேபோல, தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான 72 பொருட்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், மாதனூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வுசெய்தார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் 567 வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குப்பெட்டிகள், அழியாத மை, வாக்குச்சீட்டுகள், முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, தனிநபர் பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட 72 பொருட்கள் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வுசெய்தார்.

    மதுரை திருமங்கலத்தில் இடைத்தேர்தலையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது, ஊழியர்கள் வாக்குப்பெட்டிகளுக்கு பூஜை செய்து, தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின்னர் லாரிகள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

    இரண்டு கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, வரும் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: