நூதன முறையில் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு... தீர்வு ஒரே ஒரு பூட்டு

Youtube Video

நூதன முறையில் இருச்சக்கர வாகனங்களை திருடும் நிலை மாறி தற்போது, விலை உயர்வால், பைக்கை விட்டுவிட்டு பெட்ரோலைத் திருடுவது அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100-ஐ கடந்து விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் திருட்டு சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

    அண்மையில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்களில் பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின சென்னை அம்பத்தூர் பகுதியில்தான் இந்த காட்சிகள் அரங்கேறியுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து திருடும் இந்த கும்பல் கையில் தண்ணீர் கேன்களுடன் வலம் வருகின்றனர்.

    ஆள்நடமாட்டம் குறைந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருச்சக்கரவாகனங்களில் இருந்து பெட்ரோலை தாங்கள் வைத்திருக்கும் வாட்டர் கேன்களில் திருடிச் செல்கின்றனர். காவல்துறையினர் ரோந்து பணிகளில் சரிவர ஈடுபடாததே இந்த திருட்டுகளுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    ஒரு லிட்டர் பெட்ரோலுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுப்பதா என பொதுமக்கள் தயக்கம் காட்டுவதும் பெட்ரோல் திருடர்களுக்கு சாதமாக அமைந்து விடுகிறது. இருச்சக்கர வாகனங்கள் நூதனமாக திருடும் காலம் மாறி, தற்போது பெட்ரோலை திருடிச் செல்லும் காலம் வந்து விட்டது என நொந்து கொள்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

    இந்நிலையில், சென்னையில் பெருகி வரும் இரு சக்கர வாகன பெட்ரோல் திருட்டை தடுப்பது எப்படி என பிரபல பைக் மெக்கானிக் கிருஷ்ணமூர்த்தி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக தற்போது இருக்கும் இரு சக்கர வாகனங்களில் மேனுவல் பெட்ரோல் லாக் இருப்பதாகவும் அதிலுள்ள டியூபை கழற்றினால் எளிதாக பெட்ரோலைத் திருடி விடலாம் என்பதே பெட்ரோல் திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விடுவதாக கூறுகிறார்.

    இதுபோன்று பெட்ரோல் திருட்டை தடுப்பதற்கு பெட்ரோல் டேங்கில் கீ டைப் லாக்கை (key type lock) பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கீ டைப் லாக் பயன்படுத்தும்போது பெட்ரோல் செல்லும் டியூபை கழற்றினாலும் அதிலிருந்து பெட்ரோல் வெளி வராது. இதனால் பெட்ரோல் திருட்டை தடுக்க முடியும்.

    இதுபோன்று கீ டைப் லாக் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இரு சக்கர வாகன உதிரிபாக கடைகளிலும் 100-ரூபாயிலிருந்து பல்வேறு மாடல்களில் கிடைப்பதாகவும், அதனை எளிதாக பொறுத்தி கொள்ளலாம் எனவும் யோசனை கூறியுள்ளார்.

    அதிக பணம் கொடுத்து, அதிக லிட்டர் பெட்ரோல் போடுவதை தவிர்ப்பதும், திருட்டிலிருந்து தப்பிக்க ஒரு வழி என்கிறார்கள் மெக்கானிக்குகள். பாதுகாவலர்களின் கண்பார்வையில் வாகனத்தை நிறுத்துவதுதான் திருட்டிலிருந்து தப்பிக்க ஒரே வழி..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: