கரூரில் பள்ளி மாணவர்கள் 20 திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்: கலக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்

பெட்ரோல் நிலையம்(மாதிரி படம்)

கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பத்து திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோலும் இலவசம் என அறிவித்திருப்பது மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 • Share this:
  தமிழ் ஆர்வலரான கரூர் பகுதியைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவர், திருக்குறளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சிஸ் போன்ற தனது அனைத்து நிறுவனங்களையும், திருவள்ளுவர் பெயரில் நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் திருக்குறள் கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் சலுகையுடன் கூடிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 31ஆம் தேதி வரை அவரது பெட்ரோல் பங்கில் பத்து திருக்குறள் சொல்லும் குழந்தைகளுக்கு இருசக்கர வாகனத்திற்கு அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொல்லும் குழந்தைகளின் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோருடன் வாகனத்தில் சென்று திருக்குறளை சொல்லி பெட்ரோல் போட்டுச் செல்கின்றனர்.  மாணவர்கள மத்தியில் திருக்குறள் கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சியை பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

  இதுதொடர்பாக, பதிலளித்த கல்வியாளர் செங்குட்டுவன் மாணவ, மாணவியரை திருக்குறள் படிக்க வைக்க வேண்டும், குறளின் மீது அவர்களது ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற இலவச அறிவிப்பை வெளியிட்டதாக கூறினார்.

  மேலும், தங்களது வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,330 குறள் சொல்லும் மாணவர்களின் மூன்றாண்டு கல்வி செலவு அனைத்தும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டு இலவசமாக அவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக கூறினார். திருக்குறளை மாணவர்கள் கற்க ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இது போன்று செய்யப்படுவதாக தெரிவித்தார்.

  தற்போது, பள்ளி மாணவ மாணவிகளிடையே வாசிக்கும் திறன் மிக மிக குறைந்து விட்டது. ஆங்கில மோகத்தில் மாணவ மாணவிகள் நகர்ந்து வருகின்றனர். இதனால் தமிழ் அழிந்து விடக் கூடாது. தமிழில் பேசவும், குறள் கற்கவும், இலக்கணப் பிழையின்றி மாணவ மாணவிகள் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று இலவச அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

  மாணவர்கள மத்தியில் திருக்குறள் கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சிக்கு மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

  தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த சூழ்நிலையில்,"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம், செல்வத்துள் எல்லாம் தலை" என்ற வரிகளுக்கு ஏற்ப, கல்வி சிந்தனை மற்றும் சமுதாய நோக்கத்தோடு, மாணவர்கள் மூலம் நல்ல சிந்தனையும் அறத்தையும் நாட்டில் விதைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு 10 குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கரூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன் என்பவரின் முயற்சி சமூக ஆர்வலர் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழகத்தில் திருக்குறளின் மாண்பு குறைந்து கொண்டே வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. திருக்குறளை உலக நாடுகளைப் பின்பற்றி பேசி வருகிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் திருக்குறள் பெருமையாகப் பேசப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திருக்குறளை முன்னுதாரணம் காட்டி பேசும் நிலையை காண முடிகிறது. அப்படி இருக்கும் போது, தமிழகத்தில் உள்ள குழந்தைகள், மாணவ - மாணவிகள் திருக்குறளில் உள்ள நல்ல கருத்துக்களை வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும்.

  அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் பள்ளி பருவத்திலே திருக்குறளை முழுமையாக கற்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: